முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
148

New Page 1

முதலிய தன்மைகள் உயிர்கட்கு இருப்பினும், பிறவிகள் காரணமாக அவற்றிற்கு மறத்தல் முதலிய தன்மைகளும் இன்பத்துன்பங்களும் உளவாம்; இறைவன் தன்னைத் தாழ விட்டுப் பிறக்கப் பிறக்க, நற்குணங்கள் ஒளி பெற்று வாராநிற்கும். ‘ஆயின், இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான் என்றபடி.

    ‘அக்குணங்கள்தாம் இருக்கும்படி என்?’ என்னில், முதல் இல கேடு இல-ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை அல்ல; சொரூபத்தோடு சேர்ந்தவைகளாய் இருக்கின்றன. வீடாம் தெளிதரும் நிலைமையது, மோக்ஷமாகிற தெளிவு; பரமபதம். அதனைத் தரும் தன்மை என்றும் ஒத்திருக்குமவன். அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்; இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார். 2‘தெளி விசும்பு’ என்பர் மேலும். ‘ஆயின், இக்குணம் ‘ஒளிவரும் முழுநலம்’ என்றதிற்புகாதோ?’ எனின், மோக்ஷத்தை அளிக்கும் இறைமைக்குணம் தனியே சொல்ல வேண்டுவது ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்; மேலும், அவதாரத்துக்குப் பயன் இதுவே அன்றோ? முழுவதும் ஒழிவிலன்-மேலே கூறிய 3இரண்டனையுங் கூட்டிச் சொல்லுகிறார். இறையோன்-மேல் ‘வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்’ என்றார்; அவ்வீட்டினை அளித்தல் ஈஸ்வரனுக்கே உள்ளது ஒன்று ஆதலின், அதனைத் தெரிவிக்கும்பொருட்டு அதனை அடுத்து ‘இறையோன்’ என்கிறார். இனி, மேல் ‘பல பிறப்பாய்’ என்றாராதலின், அவ்வாறு பிறப்பினும், ஈஸ்வரத் தன்மையில் குறையாதே நிற்பான்

 

1. யஜூர் வேதம். 3. 6 : 9.

2. திருவாய். 9. 7 : 5.

3. ‘மேற்கூறிய இரண்டனையும்’ என்றது, ‘ஒளிவரும் முழுநலம், வீடாந்தெளிதரும்
  நிலைமை’ என்பனவற்றை. அதாவது, எல்லா
  நற்குணங்களையுமுடையனாந்தன்மை, மோக்ஷத்தையளிக்கும் இறைமைத்தன்மை
  என்பனவாம்.