முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
157

என

என்கிறபடியே, புறம்பான விஷயங்களில் உள்ள ஆசையை ருசி வாசனையோடே விடுங்கோள். ‘இவை எல்லாம் விடுவது எப்படி?’ என்னில், அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து - அவன் விஷயமான ஞானத்தைக்கொண்டு உணர்ந்து; அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி. இனி, அவன் அருளிச்செய்த ஞானத்தைக்கொண்டு உணர்ந்து; அதாவது, ‘அவன் அருளிச்செய்த ‘சரமஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்று கோடலுமாம்.

 (5)

28

        உணர்ந்துஉணர்ந்து இழிந்துஅகன்று உயர்ந்துஉரு
            வியந்தஇந் நிலைமை
        உணர்ந்துஉணர்ந்து உணரிலும் இறைநிலை
            உணர்வுஅரிது உயிர்காள்!
        உணர்ந்துஉணர்ந்து உரைத்துஉரைத்து அரிஅயன்
            அரன்என்னும் இவரை
        உணர்ந்து உணர்ந்து உரைத்துஉரைத்து இறைஞ்சுமின்
            மனப்பட்டது ஒன்றே.

    பொ-ரை : உயிர்காள், உணர்வையே இயற்கையாகவுடையதாய். அணு அளவினதாய்ப் பத்துத்திசைகளிலும் ஞானத்தால் நிறைந்ததாய், உடலைக்காட்டிலும் வேறுபட்டிருக்கின்ற இவ்வுயின் தன்மையினைக் கேள்விகளால் உணர்ந்து, பின் மனத்தால் உணர்ந்து, பின் யோகத்தால் உணர்ந்தாலும், இறைவனுடைய தன்மையினை உணர்தல் அரிதாம். ‘ஆயின், நாங்கள் அறியுமவகை யாங்ஙனம்?’ எனின், அரி அயன் அரன் என்னும் இவரைப் பற்றிக் கூறுகின்ற நூல்களைப் பன்முறையும் ஆராய, அவற்றைப் பன்முறையும் உரைக்க, உங்கள் மனத்தில் ஒன்று தோன்றும்; தோன்றிய அப்பொருளையே மனத்தால் பன்முறை நினைந்தும், நாவால் பன்முறை கூறியும் வணங்குங்கோள்.

    வி-கு :
‘உறற்பால, தீண்டா விடுதல் அரிது,’ என்புழிப் போன்று, ‘அரிது’ என்பது ஈண்டு இன்மைகுறித்து நின்றது, மூன்றாம் அடியிலுள்ள ‘செய்து’ என்னும் வாய்பாட்டு எச்சங்களைச் ‘செய’ என் வாய்பாட்டு எச்சங்களாகத் திரிக்க. அவற்றைப் ‘பட்டது’

 

1. ‘எல்லாத் தர்மங்களையும் விட்டு என்னையே உபாயமாகப் பற்று; நான்
  உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்; துக்கப் படாதே,’
  என்பது சரமச்சுலோகத்தின் பொருள்.