முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
161

29

29

        ஒன்றுஎனப் பலஎன அறிவரு
            வடிவினுள் நின்ற
        நன்றுஎழில் நாரணன் நான்முகன்
            அரன்என்னும் இவரை
        ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும்
            இருபசை அறுத்து
        நன்றுஎன நலஞ்செய்வது அவனிடை
            நம்முடை நாளே.


    பொ-ரை :
ஒன்று என்றும் பல என்றும் அறிதற்கு அரிய வடிவிற்குள் நிற்கின்ற நன்றான எழிலையுடைய நாராயணணும், நான்முகனும், அரனும் என்னும் இவர்களை உங்கள் மனத்தில் சமனாக வைத்து ஆராய்ந்து, பிரமன் சிவன் இவர்களிடத்தில் நீங்கள் வைத்திருக்கின்ற பற்றினை நீக்கி, உங்கள் ஆயுள் உள்ள காலத்திலேயே அவ்விறைவனிடத்தில் நன்றான பத்தியைச் செய்யுங்கள்.

    வி-கு : ‘வைத்து உள்ளி அறுத்துச் செய்வது’ என எச்சங்களை முடிக்க. ‘கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுகளே.’ (திருக்கோ. 87.) என்புழிப் போன்று, ‘செய்வது’ வியங்கோள் வினைமுற்று. பிறர்க்கு உபதேசம் செய்யும் இடமாதலின், நம்முடை நாளே’ என்பதில் ‘நம்’ என்பது முன்னிலைக்கண் வந்தது. ‘தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும், ஆபோற் படர்தக நாம்’ (கலித். மரு. 16.) ‘நாமரை யாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே’ (திருக்கோ. 164,) ‘செங்கயல்போல் கருநெடுங்கண் தேமருதா மரை உறையும், நங்கையிவர் எனநெருநல் நடந்தவரோ நாம்என்ன’ (கம். சூர்ப். 119.) என்ற இடங்களில் நாம் என்பது முன்னிலைக்கண் வந்துள்ளமை காண்க.

   
ஈடு : ஏழாம் பாட்டு: ‘அப்படியே செய்கிறோம்,’ என்று ஆறியிருந்தார்கள்; ‘ஐயோ! நீங்கள் உங்களுடைய ஆயுளின் நிலையும், இழக்கிற பொருளின் நன்மையும் அறியாமையால் அன்றோ ஆறியிருக்கின்றீர்கள்? நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே உறுதி செய்யும்வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து, உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று, மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப்பாசுரம். ‘நீங்கள் குறைந்த ஆயுளையுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்துகொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;