முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
164

30

30

        நாளும்நின்று அடும்நம பழமைஅம்
            கொடுவினை யுடனே
        மாளும்ஓர் குறைவில்லை மனனகம்
            மலம்அறக் கழுவி
        நாளும்நம் திருவுடை அடிகள்தம்
            நலங்கழல் வணங்கி
        மாளும்ஓர் இடத்திலும் வணக்கொடு
            மாள்வது வலமே.


    பொ-ரை :
(‘பற்றப்படும் இறைவன் இவனோ, மற்றையவரோ! என்று) மனத்திலிருக்கும் ஐயமாகிய குற்றம் அறும்படி நீக்கித்தூய்மை செய்து, நம்முடைய திருமகள் கேள்வனுடைய நற்றாளை நாள்தோறும் வணங்க, எக்காலத்தும் நிலைபெற்று வருத்தும் நம்முடைய பழமையான மிகக்கொடிய வினைகள் உடனே அழியும்; அதற்குமேல் ஒரு குறைவும் இன்று; உயிர் உடலை விட்டு நீங்கும் இறுதிக்காலத்தும் வணக்கத்தோடு உயிரை விடுதல் சிறப்பினையுடையதாம்.

    வி-கு : ‘அடும் வினை’ எனவும் ‘அறக்கழுவி வணங்க மாளும்’ எனவும் முடிக்க, ‘நம’ என்பதற்கு, மேல் பாசுரத்தில் ‘நம்முடை நாளே’ என்பதில் ‘நம்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க. ‘நம் திருவுடை அடிகள்’ என்பதில் ‘நம்’ தனித்தன்மைப்பன்மை. ‘நலங்கழல்’ என்ற இடத்து ‘வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின்,’ என்ற குறள் அடியை ஒப்பிடுக. ‘வணங்கி’ என்பது ‘செய’ என் எச்சத்திரிபு. மாள்வது - தொழிற்பெயர்.

    ஈடு :
எட்டாம் பாட்டு. ‘உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி கூறுகின்றீர்; நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ? இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன, ‘நீங்கள் பற்றுவதற்கு ஒருப்படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்; திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா; நீங்கள், 1‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது அக்காலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

 

1. ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவாமுன்’ என்பது, பெரிய
  திருமொழி. 1. 3 : 5.