முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
197

அப

அப்படிக் கலங்குமோ!’ என்பார்; மதி எல்லாம் உள் கலங்கி-தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்; ‘அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல், மயங்குமால் - முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்; ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள். ‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்; அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள், இனி, ‘துன்பக்குரல் கேட்பின். பொறுக்கமாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம். அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி. இனி, உங்களுக்குச் சொரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள் எனலும் ஒன்று.

(3)

 37

        என் நீர்மை கண்டுஇரங்கி இதுதகாது என்னாத
        என்நீல முகில்வண்ணர்க்கு என்சொல்லியான் சொல்லுகேனோ
        நன்னீர்மை இனியவர்கண் தங்காதுஎன் றொருவாய்சொல்
        நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?

    பொ-ரை : ‘நல்ல நீல நிறத்தினையுடைய மகன்றில் என்னும் பறவைகளே, எனது தன்மையைக் கண்டிருந்தும், இரங்கி, பிரிந்து தங்கி இருத்தல் தகாதது என்று நினையாத, என்னுடைய நீல முகில் போன்ற நிறத்தினையுடைய தலைவர்க்கு என்ன வார்த்தையினைச் சொல்லி நான் சொல்லப் போகிறேன்? நல்ல உயிரானது இனி அத்தலைவரின் பொருட்டு அவளிடத்தில் தங்கியிராது என்று ஒருவார்த்தை சொல்லுதலைச் செயவீர்களா மாட்டீர்களா?’ என்கிறாள்.

    வி-கு :
மூன்றாம் அடியிலுள்ள நீர்மை என்பது, ஆகுபெயராய் உயிரைக் காட்டிற்று. அவர்கண்-அவர்பொருட்டு; நான்காவதன் கண் ஏழாவது மயங்கிய உருபு மயக்கம். இனி அவரிடத்தில் எனக் கோடலுமாம். வாய்-சொல். சொல்-முதனிலைத் தொழிற்பெயர். ‘சொல்லுதலை நல்குதிரோ, நல்கீரோ?’ எனக் கூட்டுக. மகன்றில் என்பது, நீர்வாழ் பறவை: இது ஆணும் பெண்ணும் பிரிவின்றி வாழுமியல்பினது ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தென்ன, நீருறை மகன்றில் புணர்ச்சி போல’ (குறுந். 57) என்றார் பிறரும்.