முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
227

வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே 1சேர்ந்து தலைக்கட்டினான்,’ என்கிறார், ஆதலின், சீல குணத்தை அருளிச்செய்தவாறு காணல் தகும்.

45

        வளவேழ் உலகின் முதலாய
            வானோர் இறையை அருவினையேன்
        ‘களவேழ் வெண்ணெய் தொடுஉண்ட
            கள்வா!’ என்பன் பின்னையும்
        ‘தளவேழ் முறுவல் பின்னைக்காய்
            வல்லான் ஆயர் தலைவனாய்
        இளவேறு ஏழும் தழுவிய
            எந்தாய்!’ என்பன் நினைந்துநைந்தே.

   
பொ-ரை : வளப்பம் பொருந்திய ஏழ் உலகங்கட்கும் காரணனாய நித்தியசூரிகள் தலைவனை, போக்கற்கு அரிய தீவினையினையுடைய யான் மனத்தால் நினைந்து, நினைப்பின் மேலீட்டால் உடல் கரைந்து, ‘களவு பிரசித்தமாம்படி வெண்ணெயைக் களவு செய்து உண்ட கள்வனே!’ என்று அழைப்பேன்; அதற்கு மேல், ‘முல்லை அரும்புகள் போன்று தோன்றிய பற்களையுடைய நப்பின்னைப்பிராட்டியாருக்காகப் பசுக்களையுடைய வலிய ஆயர்கட்குத் தலைவனாக, இளமை பொருந்திய எருதுகள் ஏழனையும் தழுவிக் கொன்ற எந்தையே!’ என்று அழைப்பேன்.

    வி-கு : தொடு - வஞ்சனை ; ஈண்டுக் களவிற்கு ஆயிற்று. ‘தளவேழ் முறுவல்’ என்ற இடத்து ‘மாதரார் முறுவல்போல் மணவௌவல் முகையூழ்ப்ப’ (கலித். 27.) என்பதை நினைவு கூர்க. ‘பின்னைக்காய்’ என்பதில் ‘ஆய்’ என்பது, செய்வென் எச்சத்திரிபு. அவ்வெச்சத்தைத் ‘தழுவிய’ என்னும் எச்சத்துடன் முடிக்க.

    இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

    ஈடு :
முதற்பாட்டு. ‘நித்தியசூரிகட்கு அனுபவிக்கப்படும் பொருளானவனை, 2மனம் வாக்குக் காயங்களால் நிந்தளை செய்தேன்,’ என்கிறார்.

    வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-‘வளவிதான

 

1. ‘சேர்ந்து தலைக்கட்டினான்’ என்றது, ‘சார்ந்த இருவல்வினைகளும் சரித்து
  மாயப்பற்று அறுத்து’ என்ற பாசுரத்தை நோக்கி.

2. ‘என்பன் நினைந்து நைந்தே’ என்று பிரித்து, ‘மனம் வாக்குக் காயங்களால்’
  என்று அருளிச்செய்கிறார். என்பன்-வாக்கு; நினைதல்-மனத்தின் தொழில்;
  நைதல்-உடலின் தொழில்.