முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
235

New Page 1

கைக்கு அதிகாரமுள்ளது அவர்களுக்கே அன்றோ? அதற்கு நான் யார்? மாயோனே - பிரமன் முதலிய தேவர்களையும் அற்பநிலையுள்ள மனிதர்கள் நிலையிலே ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சரியமான வேறுபட்ட தன்மை இருந்தபடி என்!

    ‘மாயோனே, நினைந்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற்சிதையாமே மனஞ்செய் ஞானத்து உன் பெருமை, இமையோர் பலரும் முனிவரும் நினைந்து நைந்து உள்கரைந்து உருகிப் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் மாசூணாதோ?’ என்று கூட்டி முடிக்க.

(2)

47

        மாயோ னிகளாய் நடைகற்ற
            வானோர் பலரும் முனிவரும்
        நீயோ னிகளைப் படைஎன்று
            நிறைநான் முகனைப் படைத்தவன்
        சேயோன் எல்லா அறிவுக்கும்
            திசைகள் எல்லாம் திருவடியால்
        தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும்
            தாயோன் தானோர் உருவனே.


    பொ-ரை :
‘உயர்ந்த பிறவிகளையுடையவர்களாய்த் தத்தம் தொழில்களை நன்கு அறிந்த தேவர் பலரும், முனிவர்களும் ஆகிய பொருள்களை நீ படைப்பாய் என்று ஞானம் நிறைந்த பிரமனைப் படைத்தவன்; அப்பிரமன் முதலான தேவர்களுடைய அறிவிற்கும் அப்பாற்பட்டவன்; திசைகளையுடைய பூமி முழுவதையும் தன் திருவடிகளால் அளந்தவன்; எல்லா உயிர்கட்கும் தாயைப் போன்றவன்; இப்படிப்பட்ட இவனும் ஒரு தன்மையினையுடையவனாய் இருக்கிறானே! மேன்மைக்கு எல்லை இல்லாததனைப்போன்று, நீர்மைக்கும் எல்லையின்றி இருக்குந்தன்மை என்னே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

   
வி-கு : ‘அடியளந்தான், தாஅயது எல்லாம் ஒருங்கு’ (குறள். 610.), ‘மூவுலகும் ஈரடியால் முறைநிறம்பா வகைமுடியத், தாவிய சேவடி’ (சிலப். ஆய்ச்.) என்பன ஈண்டு நினைத்தல் தகும். நான்காமடியில் முதலிலுள்ள ‘தாயோன்’ என்பது, தாய் என்னும் வினையடியாகப் பிறந்த தொழிற்பெயர்; தாய் - தாவி என்பது பொருள். இரண்டாவது ‘தாயோன்’ என்பது தாய் என்னும் பெயரடியாகப் பிறந்த முறைப் பெயர். தாய் - பெற்ற தாய்.