முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
250

52

52 

        உண்டாய் உலகுஏழ் முன்னமே
            உமிழ்ந்து மாயை யால்புக்கு
        உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
            உவலை யாக்கை நிலைஎய்தி
        மண்டான் சோர்ந்தது உண்டேலும்
            மனிசர்க்கு ஆகும் பீர்சிறிதும்
        அண்டா வண்ணம் மண்கரைய
            நெய்ஊண் மருந்தோ மாயோனே?


    பொ-ரை :
‘ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே, முற்காலத்தில் உலகங்கள் ஏழனையும் உண்டாய்; வெள்ளம் நீங்கிய அக்காலத்திலேயே அதனை உமிழ்ந்து, (பிற்காலத்தில்) சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த உடலை மேற்கொண்டு (ஆயர்பாடியில் ஒவ்வொரு வீட்டிலும்) நுழைந்து ஆசையால் வெண்ணெயினை உண்டாய்; (முன்னர் நீ உண்டு மீண்டு உமிழ்கின்ற காலத்தில்) அம்மண் திருவயிற்றில் சிறிது தங்கியிருக்குமேயாயினும் (மண்ணை உண்ணுகின்ற குழந்தைகட்கு வருகின்ற) சோகை என்னும் நோயானது சிறிதும் வாராதபடி அம்மண் கரைவதற்குப் (பிற்காலத்தில் மனித சரீரத்தோடு உண்ட) நெய் மருந்தாகுமோ?’ ஆகாது என்றபடி.

    வி-கு :
‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண, அண்ணாத்தல் செய்யாது அளறு,’ என்புழி ‘ஊன்’ என்னுஞ் சொல்லை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்வது போன்று, ஈண்டு ‘முன்னம்’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க. ‘பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சன்’ (அப்பர் தேவா.) என்புழிப்போன்று ‘மனிசர்’ என்புழித் தகரத்திற்குச் சகரம் போலி. ‘ஊண்’ என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயர். ‘எய்தி’ என்பதனைப் ‘புக்கு’ என்பதுடன் முடிக்க.

    ஈடு :
எட்டாம் பாட்டு. 1இவர் இப்படி அகலப்புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து, ‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ!’ என்ன, கேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன்தான் அருளிச்செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும் ‘அடியேன் அறியேன்’ என்றார். ‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே

 

1. ‘நெய்யூண் மருந்தோ’ என்கையாலே, இறைவன் ‘நெய்யூண் மருந்து’
  என்றான் என்பது பெறப்படுதலால், அதற்குத் தக அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.