முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
255

கூற

கூறலுமாம். எவ்வுயிர்க்குந்தாயோன் - எல்லா உயிர்கட்கும் தாய் போன்று பரிவையுடையவன் ஆனவன், தம்மான - சர்வேஸ்வரன். என் அம்மான் - நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன். இனி, ‘நித்தியசூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும். நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மாமூர்த்தியைச் சார்ந்து-விலக்ஷணமான திருமேனியையுடைய அம்மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம்’ எனக்கூட்டுக.

(9)

54

        சார்ந்த இருவல் வினைகளும்
            சரித்து மாயப் பற்று அறுத்துத்
        தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
            திருத்தி வீடு திருத்துவான்
        ஆர்ந்த ஞானச் சுடராகி
            அகலம் கீழ்மேல் அளவுஇறந்து
        நேர்ந்த உருவாய் அருவாகும்
            இவற்றின் உயிராம் நெடுமாலே.


    பொ-ரை :
நிறைந்த அறிவின் ஒளியாகி, பத்துத்திசைகளின் அளவையுங்கடந்து, நுட்பமான மூலப்பகுதியும் உயிர்களுமாகிய இவற்றிற்கு அந்தராத்துமாவாய் இருக்கிற நெடுமால், பொருந்தி இருக்கின்ற இரண்டு கொடிய வினைகளையும் என்னை விட்டு நீக்கி, பொருள்களிடத்துள்ள ருசி வாசனைகளையும் நீக்கி, யான் தனக்கே உரியவனாகும் படி தன்னிடத்திலேயே மனத்தை வைக்குமாறு நன்னெறியிற் செலுத்தி, பின் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினையும் அலங்காரம் செய்யத் தொடங்கினான்.

   
வி-கு : ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்றார் திருவள்ளுவர். ‘நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலின், இருவினையும் சேரா! என்றார்,’ என்பர் பரிமேலழகர். மாயம்-ருசி ரூபமான அறிவு. பற்று-வாசனை. தீர்தல்-விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். ‘நேர்ந்த’ என்பது நேர்மை என்னும் பண்படியாகப் பிறந்த பெயரெச்சம். நேர்மை-நுண்மை. திருத்துவான் - முற்று.