முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
318

யாக்கினவன். இனி, நாதன் - இத்திருவாய்மொழியில் முதற்பாசுரத்தில் சொன்ன சேஷியாந்தன்மையையுடையவன். ஞாலங்கொள் பாதன் - இரண்டாம் பாசுரத்தில் சொன்ன அவதார எளிமையையுடையவன். என் அம்மான் - எனக்குக் கிட்டலாம்படி திருமலையிலே வந்து நின்று என்னை அடிமை கொண்டவன். மூன்றாம் பாசுரத்தில் ‘கண்ணாவான்’ என்றவதனை நினைக்கிறார். ஓதம் போல் கிளர்வேத நீரன்-இவனுடைய இந்நிலைமைகளைப் பேசப்புகின், கடல் கிளர்ந்தாற்போலே கிளராநின்றுள்ள வேதத்தாலே கூறப்படுகின்ற நீர்மையையுடையவன். நீர்மையாவது, ஆர்ஜவகுணம்.

(10)

88

        நீர்புரை வண்ணன், சீர்சட கோபன்
        நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே.

    பொ-ரை :
ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், நீரினது தன்மையினைப்போன்ற தன்மையினையுடைய இறைவன் சீராகிய ஆர்ஜவ குணத்தைப் பற்றிக் கூறிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓர்க.

    வி-கு :
‘நீர் புரை வண்ணன்’ என்பதற்குக் கருத்து, தண்ணீரானது மக்கள் காட்டின வழியே செல்லுந்தன்மையது; அது போன்று, இறைவனும் மக்கள் செல்லும் வழிகளிலேயே செல்லுந்தன்மையன் என்பது. வண்ணம் - தன்மை; நிறம் அன்று. ஓர்தல் - வியங்கோள். ‘சடகோபன் நேர்தல் ஆயிரத்து நீர் புரை வண்ணன் சீராகிய இவை ஓர்தல்’ எனக் கூட்டுக.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழிகளிலும் அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ என்கிறார்.

   
நீர் புரை வண்ணன் சீர் - நீரோடு ஒத்த தன்மையையுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை. ஆர்ஜவகுணமாவது, சம்சாரிகள் விலங்கிப்போனது தனக்கு வழியாம்படி தான் செவ்வியனாகை. ஆக, இத்திருவாய்மொழியில் அருளிச்செய்தது சர்வேஸ்வரனுடைய ஆர்ஜவ குணம் என்பது போதரும். சடகோபன் நேர்தல் - இவை தாம், இவ்வார்ஜவ குணத்திற்கு இலக்கான ஆழ்வார் அருளிச்செய்தவை. இவைதாம் இவ்வர்த்தத்தைக் கடக்க நின்ற ஒருவரால் பாடப்பட்டவை அல்ல என்பார், ‘சடகோபன் நேர்தல்’ என்கிறார்.