|
90
90
சூழல் பலபல
வல்லான்
தொல்லைஅம்
காலத்து உலகைக்
கேழல்ஒன்
றாகி இடந்த
கேசவன்
என்னுடை அம்மான்
வேழ
மருப்பை ஒசித்தான்
விண்ணவர்க்கு
எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல்
சேர்ந்தான்
அவன்என்
அருக லிலானே.
பொ-ரை : பற்பல அவதாரங்களை எடுக்க வல்லவன் அழகியதான
பண்டைக்காலத்தில் ஒப்பற்ற வராகமாகி இவ்வுலகைக் கோட்டாலே குத்தி மேலே கொண்டு வந்த கேசவன்,
என்னுடைய தலைவன், குவலயாபீடம் என்னும் யானையினது கொம்பை முரித்தவன், தேவர்கட்கு நினைக்கவும்
அரியவன், ஆழமான நீண்ட கடலில் யோக நித்திரை செய்கின்றவன் ஆன அவ்விறைவன் என் அருகில்
இருக்கின்றவன் ஆனான்.
வி-கு :
‘என்றிவ் வூழிகளானே நெய்தலும் குவளையும் ஆம்பலும்
சங்கமும் கமலமும் வெள்ளமும் என எண் குறித்திட்ட பெயர்களது அளவிற்றாகிய காலவீட்டம் கழிந்த
பின் உயிர்கள் உளவாதற் பொருட்டு அந்நிலத்தினை எடுத்திட்ட கேழற்கோலத்தால் திகழ்வரப் பெயர்
பெற்ற இவ்வராக கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனையுணர்த்துதலின், அச்செயல்கள்
பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவராலும் அறியப்படாத’ (பரிபா. 2.
பரிமே.) என்ற உரைப்பகுதி, இங்குத் ‘தொல்லை அம் காலத்து’ என்றவிடத்து ஒப்பு நோக்கல் தகும்.
‘அருகலில்’ என்புழி ‘இல்’ ஏழாம் வேற்றுமை உருபு.
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘என் சுற்றுப்புறத்தில் வசித்தவன்,
அது பொறுத்தவாறே என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.
சூழல் பல பல வல்லான்
- இங்குச் சூழல் என்றது, அவதாரத்தை. சேதநரை அகப்படுத்திக்கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச்
‘சூழல்’ என்கிறார். சாதி பேதத்தையும் 1அவாந்தர பேதத்தையும் நோக்கிப்
‘பலபல’ என்கிறார். கர்மம் செய்ய வல்லது அன்று, அனுக்கிரகம் செய்ய வல்லது; ஆதலின்,
கர்மம் காரணமாகப் பிறக்குமவனுக்கும் முடியாத பிறவிகளை எடுப்பவன் ஆதலால்,
1. அவாந்தர பேதம் - ஒரே சாதியிலுள்ள வேறுபாடு.
|