முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
334

94

94

        1மாயன் என்நெஞ்சின் உள்ளான்
            மற்றும் எவர்க்கும் அதுவே
        காயமும் சீவனும் தானே
            காலும் எரியும் அவனே
        சேயன் அணியன் எவர்க்கும்
            சிந்தைக்கும் கோசரம் அல்லன்
        தூயன் துயக்கன் மயக்கன்
            என்னுடைத் தோளிணை யானே.


    பொ-ரை :
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன் என் நெஞ்சிலே தங்கியிருக்கிறான்; இது என்ன சேராச்சேர்த்தி? இதனை வேறு எவரேனும் பெற்றார் உளரோ? எல்லா உடல்களும் எல்லா உயிர்களும் தானேயாவன்; காற்று நெருப்பு முதலான ஐம்பெரும்பூதங்களும் அவனேயாவன்! தன் முயற்சியால் காண இருப்பார்க்கு அண்மையில் இருப்பவன்; எத்துணைப் பெரிய ஞானமுடையார்க்கும் சிந்தையால் நினைப்பதற்கும் ஒண்ணாதவன்; யசோதை முதலானவர்கட்குப் பரம்பொருள் என்ற வாசனையும் இல்லாத தூய எளிமையினையுடையவன்; என்னோடு கலந்தவன் ஆன இறைவன் என் தோள்களில் இருக்கின்றவன் ஆனான்.

    வி-கு : ‘அதுவே’ என்பதன் ஏகாரத்தைப் பிரித்து ‘எவர்க்கும்’ என்பதுடன் கூட்டுக. கோசரம்-ஐம்பொறி மனம் இவற்றிற்கு விஷயமாதல். துயக்கன் - மனத்திரிவை உண்டுபண்ணுபவன். மயக்கன் - கலந்தவன்.

    ஈடு :
ஆறாம் பாட்டு. 2‘எல்லாப்பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன் என் தோளைப் பற்றி வாழ்கின்றான்’ என்கிறார்.

    மாயன் என் நெஞ்சின் உள்ளான்-ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன் என்னுடைய மனத்தன் ஆயினான். இது என்ன பெறாப்பேறு? இது என்ன சேராச் சேர்த்தி? மற்றும் யாரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உளரோ? ‘நீர் பெற்ற பேறு தான் என்?’ என்னில், இது என்கிறார் மேல்: காயமும் சீவனும்

 

1. ‘மாயன் என் நெஞ்சினிலுள்ளான்’ என்பதும் பாடம்.

2. ‘காயமும் சீவனும் தானே, என்னுடைத் தோளிணையானே’ என்ற பதங்களை
  நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்.