முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
335

தானே-தேவ மனித முதலான சரீரங்களும் அவ்வச்சரீரங்களில் தங்கியிருக்கிற ஆத்துமாக்களும் அவன் இட்ட வழக்கு. காலும் எரியும் அவனே காற்றும் தீயும் அவன் இட்ட வழக்கு. ஐம்பெரும் பூதங்களில் இரண்டனைக் கூறியவதனால், 1ஏனையவற்றையும் உபலக்ஷணத்தாற்கொள்க. சேயன் - தன் முயற்சியால் காண்பார்க்குத் தூரத்தில் இருப்பவன் ஆவன். அணியன் - அவனாலே அவனைக் கண்பார்க்குக் கைப்புகுந்து அணியனாய் இருப்பான். எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் - எத்துணை மேம்பட்ட ஞானமுடையவர்களுக்கும் கண்ணுக்கு விஷயம் ஆகாமையே அன்றி, மனத்தால் அறிவதற்கும் முடியாதவனாக இருப்பான். இதனால், தூரத்தனாம்படிக்கு எல்லை கூறினார். தூயன்-இப்படி இருக்கிறவன் யசோதை முதலானவர்கட்கு 2‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘ என்னலாம்படி இருப்பான். இதனால், அணிமைக்கு எல்லை கூறினார். துயக்கன் மயக்கன் - உகவாதார்க்கு ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன். இனி, இதற்கு 3‘அருவினையேன்’ என்று அகன்ற என் மனத்தைத் திரியவிட்டு, 4‘உன் தேனே மலரும் திருப்பாதம் சேறுமாறு வினையேனே’ என்னும்படி என்னுடனே கலந்தவன் என்று கூறலுமாம். என்னுடைத் தோளிணையானே-என் அளவில் 5அங்ஙன் அன்றிக்கே, திருவடி திருத்தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இராநின்றான்.

(6) 

95

        தோளிணை மேலும்நன் மார்பின்
            மேலும் சுடர்முடி மேலும்
        தாளிணை மேலும் புனைந்த
            தண்அம் துழாயுடை அம்மான்
        கேளிணை ஒன்றும் இலாதான்
            கிளரும் சுடர்ஒளி மூர்த்தி
        நாளணைந்து ஒன்றும் அகலான்
            என்னுடை நாவி னுளானே.

 

1. ‘ஐம்பெரும்பூதங்களுள் மூன்றனைக் கூறியவதனால், ஏனை இரண்டனையும்
  உபலக்ஷணத்தாற்கொள்க’ என்றனர் முன்னும். (பக். 100) 

2. ஸ்ரீ விஷ்ணு புரா. 4. 6 : 15.

3. திருவாய் 1. 5 : 5.

4. திருவாய் 1. 5 : 5.

5. ‘அங்ஙனன்றிக்கே’ என்றது-ஐயம் திரிபுகளை உண்டாக்காமையே அன்றி
  என்றபடி.