| ந 
    நாவினுள் நின்று 
மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்-நாவின் நுனியில் மலர்கின்ற ஞானத்திற்குக் கருவியான கலை 
விசேடங்களுக்கு எல்லாம். ஆவியும் ஆக்கையும் தானே - ‘இப்பொருளை இச்சொல் காட்டக்கடவது’ என்று 
நியமித்துவிட்டவன் அவன் என்றவாறு. ஆக, சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட 
வழக்கு என்றபடி. அழிப்போடு அளிப்பவன் தானே - சிற்றறிவினர்களான இம்மக்களுடைய நினைவின் 
குற்றங்களாலும், எழுதுங்காலத்து உண்டாகும் குற்றங்களாலும், பாடபேதங்களாலும், கலைகள் உருமாயும் 
அளவில் அழித்தும், விரும்புகிற காலத்தில் உண்டாக்கியும் செல்கின்றவன் தானே. இனி, இதற்கு,
1‘மற்றை அழித்தல் அளித்தல்களை அருளிச்செய்கிறார்’ என்று பொருள் கூறுவாரும் 
உளர். பூ இயல் நால் தடம் தோளன் - 2பூவால் அல்லது சொல்லாதபடி சுகுமாரமாய், கற்பகத்தரு 
பணைத்தாற்போன்று நான்காய், சுற்றுடைத்தாய் இருக்கிற திருத்தோள்களையுடையவன். இனி, ‘பூ இயல் 
தோள்’ என்பதற்குப் ‘பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்’ என்று பொருள் கூறலுமாம். பொரு 
படை ஆழி சங்கு ஏந்தும்-பணைத்துப் பூத்த கற்பகத்தருப்போலேயாயிற்று, போருக்குக் கருவிகளான திவ்விய 
ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும்படி. போர் செய்வதற்குக் கருவிகளாய் இருத்தலின், 
‘பொருபடை’ என்கிறார். காவி நல்மேனி-அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்கும் 
வடிவழகு. காவி, வடிவழகிற்கு உவமானமாக நேர் நில்லாமையாலே ‘நன்மேனி’ என்கிறார். 
கமலக்கண்ணன் என் கண்ணினுளானே - திருமேனியின் அழகாகிய பெருவெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் 
இருத்தலின் ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார். வெளிப்பொருள்களை நுகர்ந்து போந்த 
இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். 
இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் 3கண்வட்டக்கள்ளனாம் ஆதலின், ‘கண்ணினுளானே’ 
என ஏகாரங்கொடுத்து ஓதுகின்றார். 
(8) 
1. 
‘மற்றை அழித்தல் அளித்தல்களை’ என்றது, உலகை அழித்தல் காத்தல்களை.
 2. பூக்களின் தன்மையான சௌகுமார்யத்தையுடைய தோள் என்பது பொருள்.
 
 3. கண்வட்டக் கள்ளன் - சிநேகிதனுக்கு ஒன்று வேண்டியிருக்க, அதனைச்
 செய்யாவிடின், அவன் கண்முன் 
வரப் பயப்படுகின்றவன்.
 |