முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
357

104

104

        கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
        எண்தானும் இன்றி யேவந்து இயலுமாறு
        உண்டானை உலகுஏ ழும்ஓர் மூவடி
        கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே.


    பொ-ரை :
மனமே, காரியங்கள் வந்து பலிக்குங்காலத்தில் நமது நினைவு சிறிதும் இல்லாதிருப்பினும், தாமாகவே பலித்ததனை இப்பொழுது பார்த்தாய் அன்றோ? பெருவெள்ளத்தால் அழியப் புக்க காலத்தில் அழியாதவாறு ஏழுலகங்களையும் உண்டு காப்பாற்றியவனை’ ஏழுலகங்களையும் ஒப்பற்ற மூன்று அடிகளாலே அளந்து தனக்கு உரித்தாக்கிக்கொண்டவனை நீயும் கண்டு கொண்டாய்.

    வி-கு : வாய்க்கின்று-வாய்க்குமிடத்து. இயலுதல் - பலித்தல், ‘உலகேழும்’ என்பதனைத் தாப்பிசைப் பொருள்கோளாக முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க. ‘ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும், எனையாளும் ஈசன் செயல்,’ என்பது ஈண்டு ஒப்பு நோக்குக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. மேல், ‘எண்ணிலும் வரும்’ என்ற எண்தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று அவன் படியை நெஞ்சுக்கு 1மூதலிக்கிறார்.

    கண்டாயே நெஞ்சே-நான் சொன்னபடியே பலத்தோடே நிறைவு பெற்றபடியைக் கண்டாயே. நெஞ்சே - ஞானம் செல்லுதற்கு வழியாகவுள்ள உனக்குச் சொல்ல வேண்டா அன்றே? கருமங்கள் வாய்க்கின்று - காரியங்கள் பலிக்குமிடத்தில். ஓர் எண்தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே - ‘எண்ணிலும் வரும்’ என்றுதான் மிகையாம்படி வந்து பலித்துக்கொண்டு நிற்கிறபடி கண்டாயே. இதனால், பகவானுடைய பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவு அன்றுகாண் என்பது பெறுதும். இத்தலையில் எண் இன்றிக்கே இருக்கப் பலிக்கும் என்னுமிடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் மேல் : உலகு ஏழும் உண்டானை - பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ? உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை - இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவு உண்டோ? இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?

 

1. மூதலித்தல் - நிரூபித்தல்.