முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
121

இன

    இனி, இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி: பற்றிலன் ஈசனும் - 1‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,

    முற்றவும் நின்றனன் - அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், 2‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று, 3நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.

    பற்றிலையாய் - விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு? அவன் முற்றில் அடங்கு - அவனையே எல்லாமாகப் பற்றப் பார்: ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின், 4‘எல்லாப் பொருளும் வாசுதேவனே’ என்றும், 5‘தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும் காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ என்றும், ‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும் வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் என்பது ஓர்தல் தகும்.

(6)

 

1. ஸ்ரீ கீதை.

2. ஸ்ரீராமா. யுத். 41 : 4.

3. நித்யாஸ்ரிதை - எப்பொழுதும் ‘அகலகில்லேன் இறையும்’ என்று மார்பில்
  எழுந்தருளியிருக்கிற பெரிய பிராட்டியார்.

4. ஸ்ரீ கீதை. 7 : 10.

5. சுபால உபநிடதம்.