முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
129

    வி-கு : ‘ஈறில’ என்பதனை ஒண்பொருளுக்கும் கூட்டுக. உயிர்கள் பல என்பதும், அழிவற்றவை என்பதும், பரந்தமிழ்ப் பெருமக்களுடைய கொள்கை. ‘மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்’ என்ற புறநானூற்றுப் பகுதியையும், ‘மன்னுயிர் எல்லாந் தொழும்’ என்ற திருக்குறளையும் காண்க. ‘ஈறில வண்புகழ் நாரணன்’ என்ற இடத்து ‘மன்பெருஞ் சிறப்பின், தாவா விழுப்புகழ் மாயோன்’ என்ற தொல்காப்பியம் ஒப்பு நோக்குதல் தகும்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘அழகிது; அப்படியே செய்கிறோம்; வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான மந்திரம் யாது?’ என்ன, அது இன்னது என்றும், அதனுடைய பொருள் நினைத்தற்கு உரியது என்றும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின், இம்மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளாநிற்பர்; நம் ஆசாரியர்கள், ‘ஆத்தும சொரூபம் இன்னபடி என்பதற்கு ஏற்றதாயுள்ள இதனுடைய பொருள் நினைவு மோக்ஷத்திற்குச் சாதனம்’ என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள். மற்றும் வேதங்களுக்கும் இவ்வாழ்வார்க்கும் இம்மந்திரம் சொல்லச் சமயம் வாய்த்த போது முன்னர் மந்திரத்தைச் சொல்லி, பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்; அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல் செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்; அதற்குக் காரணம், பொருளின் நினைவு இன்றியமையாதது ஆகையாலே. 1‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’ 2‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ என்பன தமிழ் மறை. 3‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’ என்பன வடமொழி மறை.

    இத்திருப்பாசுரத்தால் திருமந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார். 5ஆழ்வான் இப்பாட்டளவும் வரப்பணித்து இப்பாட்டு

 

1. திருவாய். 1. 3 : 3.

2. மேற்படி, 2. 7 : 2.

3. தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.

4. மேற்படி. மேற்படி.

5. இது, இத்திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும் மந்திரத்தின்
  பொருள் ஆசாரியன்பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
  ஆழ்வான், கூரத்தாழ்வார். பட்டர், சீராமப்பிள்ளை இவ்விருவரும்
  ஆழ்வாருடைய திருக்குமாரர்கள். ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,
  கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.