முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
133

மூன

மூன்றாந்திருவாய்மொழி - ‘பத்துடையடியவர்’ 

முன்னுரை

    ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்; ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத்தக்கவன்’ என்றார் இரண்டாந்திருவாய்மொழியில்; இத்திருவாய்மொழியில் அவனது 1சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின், ‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச்செய்கின்றீர்; இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே, சர்வேஸ்வரனாய், எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை இந்த அற்பனான 2சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன, ‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே? அப்படியே, இச்சம் சாரிசேதனனுக்கு வழிபடலாம்படி அவன் தன்னைக் கொண்டு வந்து தாழவிட்டு எளியனாமாகில், இவனுக்கு வழிபடத் தட்டு இல்லையே?’ என்று கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச்செய்கிறார்.

    ‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின், நல்வினை அற்ற மக்கள் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத் தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து கேடுறுதற்கும், நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க. 3‘சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்; அதுதானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ்வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று 4எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தார்.

 

1. சௌலப்யம் - எளிமை

2. சம்சாரி சேதனன் - பிறவிப்பெருங்கடலில் நன்றாக உழன்று சஞ்சரிக்கின்ற
  ஆத்துமா.

3. எளிமையே உய்வு பெறுவதற்கும் கேடுறுதற்கும் காரணம் என்பதற்குக்
  காட்டும் ஐதிஹ்யம், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கும் வாக்கியம்.

4. எம்பார் - இவர், இராமாநுசருடைய மாணாக்கர், உடையவர் - இராமாநுசர்.