முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
198

    ஈடு : நாலாம் பாட்டு. ‘அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் மேல்; ‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்; அவன் அரைக்கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே? இவ்வளவிலே சில மகன்றில்கள், ‘நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து, ‘நாங்கள் இவ்விடத்திற்குச் செய்யவேண்டுவது என்ன?’ என்று வந்து முகங்காட்டினவாகக் கொண்டு, அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று ஆசையற்றவளாய், பின்னரும் ஆசைப்பெருக்காலே, பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று, ‘இத்தனையுஞ் சொல்லவல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள்.

    என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-என் நீர்மை கண்டு-என் மென்மைதனைக்கண்டு அருள் செய்து, நாம் பிரியுமது தகாது’ என்னாதே போகட்டுப் போனவர்க்கு. பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார். கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, 1‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ 2‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார். என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ - இந்நிலையிலும் ‘என்னுடையவன்’ என்னும்படி கலந்த போது முகங்கொடுத்தவன் ஆதலின், ‘என் நீல முகில் வண்ணர்க்கு என்கிறாள். திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்னும் நினைவாலே, ‘அவர்க்கு நான் சொல்லி விடுவதுஎத்தை?’ என்கிறாள். ‘இங்ஙனம் சொல்லுவான் என்?’ என்னில் ‘கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் போகின்றார்?’ என்னுமதனாலே. ‘ஆயின், கண்டானோ?’ என்னில், ஏன்? கண்டிலனோ? கலக்கிற சமயத்தில் கை நெகிழ்த்த இடமெல்லாம் வெளுத்தபடி கண்டிருப்பானே.

 

1. திருக்குறள், 1187.
2. குறுந்தொகை, 399.