முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
58

New Page 1

    ஈடு : 1‘இறைவன் எல்லா நற்குணங்கட்கும் தான் இருப்பிடனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; 2அக்குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்வியாத்ம சொரூபத்தின் வேறுபாட்டினைக்காட்டி உபகரித்தான்; இப்பேற்றுக்கு என் பக்கல் சொல்லக்கூடிய நன்மை சிறிதும் இன்றி இருக்கவும், 3நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்; 4தம் தன்மைகளை அடைந்தவர்களாக இருக்கின்ற 5நித்தியசூரிகட்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; தன்னுடைய திவ்விய விக்கிரகத்தின் வேறுபாட்டினைக் காட்டி உபகரித்தான்,’ என்று அவன் செய்த உதவிகள் அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான 6கைங்கரியத்தைச் செய்து உய்வு பெறுவதற்கு வாராய்,’ என்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிறார். இனி, ‘ஆறு 7கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்; நீர் வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து பிழைக்கும்; அவை போன்று, இறைவனுடைய குணங்களின் எடுப்பு இருந்தபடி கண்ட நமக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை; அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார் எனலுமாம். 8இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன, ‘பெருமாளும் ஒரு படி

 

1. இங்கு ‘இறைவன்’ என்பது தொடக்கமாகவுள்ள ஐந்து வாக்கியங்களும்
  முறையே, இத்திருப்பாசுரத்திலுள்ள ‘உயர்நலமுடையவன்’ என்பதனையும்,
  ‘யவன்’ என்பதனையும், ‘அருளினன்’ என்பதனையும், ‘அமரர்கள் அதிபதி’
  என்பதனையும், ‘சுடரடி’ என்பதனையும் நோக்காகக்கொண்டு எழுதப்பட்டவை.

2. ‘குணங்களை என் கூறுவது கொம்பினைச்சேர்ந் தவையுய்யப், பிணங்குவன
  அழகு இவளைத் தவஞ்செய்து பெற்றதுகாண்!’ (கம்பரா. கார்முகப். 18.)
  என்பது, இங்கு நினைவிற்கு வருகின்றது.

3. நிர்ஹேதுகம். காரணமில்லாமை.

4. தீவினை இல்லாதிருத்தல் முதலிய தன்மைகள்.

5. நித்தியசூரிகள் - சமுசாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவர்களாய்,
  இறைவனுடைய அனுபவத்தில் ஒரு நாளும் குறைதல் இல்லாதவர்களாய்
  இருக்கும் தேவர்கள். அவர்களாவார் - ஆதிசேடன், கருடன், சேனை
  முதலியார் முதலானோர்.

6. கைங்கரியம் - தொண்டு.

7. கிண்ணகம் - வெள்ளம்.

8. இளையபெருமாள் என்றது இலக்குமணனை, பெருமாள் என்றது
  ஸ்ரீராமபிரானை. இங்ஙனம் கூறுதல் வைணவப் பெருமக்கள் மரபு.