முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
60

New Page 1

மேன்மையினையும் பார்த்தால், சூரியன் முன் நட்சத்திரங்கள் போலவும், மஹாமேருமலையின் உச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும், உள்ளனவாக இருக்கச்செய்தே இல்லை என்னலாம்படி இருக்கையைத் தெரிவித்தபடி. இதனால், அவர்கள் உயர்வின் சிறுமையைத் தெரிவித்தபடி. இனி, 1‘உயர்வற’ என்பதற்கு, ‘எல்லோருக்கும் உயர்வு உண்டாகும் போது வருத்தமுண்டு; அப்படி வருந்த வேண்டுமோ?’ என்றால், ‘உயர்வற உயராநிற்கும்’ என்று உரைத்தலுமாம். உயர்வு - வருத்தம். இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் 2‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்தார்.

    ‘ஆயின் மற்றையோருடைய உயர்வுகளை எல்லாம் இல்லை என்னலாம்படி செய்தால் தனக்கு ஓரெல்லை உண்டாய் இருக்குமோ? என்னில், உயர் - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையில் அனுபவித்தாலும் அப்பாற்பட்டு, வாக்காலும் மனத்தாலும் அளவிட்டு அறிய முடியாதபடி உயராநிற்கும். ஆயின், 3‘செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன,’ என்கிறபடியே, இங்குக் கூறப்படும் உயர்வும் ஒரு காலத்தில் தாழுமோ?’ எனின், அன்று; ‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி. ‘ஆயின், 4கரை கட்டாக் காவிரி போன்று குணங்கள் பரந்திருந்தால் இவற்றுள் யாதாயினும் ஒன்று பயன் இல்லாமல் பாடு பட்டுக்கிடக்குமோ?’ என்னில், நலம் - கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நன்செய் நிலம் போன்று எல்லாக்குணங்களும் ஒக்கக் கொள்ளத் தக்கனவாக இருக்கும். இங்கு ‘நலம்’ என்றது, ஆனந்த

 

1. உயர்வு என்பதற்கு, வருத்தம் என்பது நேர்ப்பொருளன்று; உயர்வு என்பது
  வருத்தப்பட்டு அடையவேண்டுவது ஒன்று. ஆதலால், வருத்தம் - காரணம்;
  உயர்வு - காரியம், ஆகவே, இங்கு வருந்துதலாகிய காரணத்தை ‘உயர்வு’
  எனக் காரியமாக உபசரித்துக் கூறியுள்ளதாகக் கொண்டு உரைகாரர் இவ்வுரை
  அருளிச்செய்கின்றார் என்று கோடல் அமையும். ‘அருளல்லதியாதெனில்’
  என்ற திருக்குறள் உரையில், ‘’ஊன் தின்கை’ ஆகிய காரணத்தைப் ‘பாவம்’
  எனக் காரியமாக்கிக் கூறினார்,’ என்ற பரிமேலழகர் உரை இங்கு நோக்கல்
  தகும்.

2. ஸ்வாபாவிகம் - இயற்கை. இது, தோத்திராத்நம். 11.

3. ஸ்ரீராமா. அயோத். 105.16.

4. ஒரு காலத்தில் காவேரி கரை கட்டப்படாமல் இருந்ததையும், பின்னர்க்
  கரிகாற்பெருவளத்தானால் கரை கட்டப்பட்டமையும் இங்கு நினைவு கூர்க.