முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
66

வாய் வைக்குமாறு போன்று. இவரும் 1‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற 2திருவடிகளிலே வாய் வைக்கிறார்.

    தொழுது - நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஆத்துமாவின் தன்மைக்கு ஏற்ற தொழிலை (தொழுதலை)ச் செய்து, எழு - 3‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய். 4அடியிலே தொழாமையால் வந்த குறைவு தீரும்படி அடியிலே தொழுது பிழைப்பாய்,’ என்கிறார். என் மனனே, இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனையே முன்பு. இருவர் கூடப் 5பள்ளியில் ஓதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று 6‘மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

    பாட்டை முடியச்சொல்லி, ஈற்றில் ‘அவன்’ என்று கூறின் அமையுமே? அடிதோறும் ‘அவன், அவன்’ என்று ‘கூறுவதற்குக் கருத்துயாது?’ எனின், இவ்வாழ்வார்தாம், 7இத்திருவாய்மொழியில் இறைவனுடைய இறைமைத்தன்மையினை ஆயிற்று அருளிச்செய்கிறது; அல்விறைமைத்தன்மைக்கு ஒவ்வோரடியிலும் கூறுகின்ற அவ்வக்குணமே வேறு குணங்களை வேண்டாததாய் இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கின்றார்.

 

1. திருவாய். 1. 5 : 5.

2. திருவள்ளுவரும் தமது திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் எழு
  திருக்குறள்களால் திருவடிகளையே கூறல் ஈண்டு நினைவு கூர்க.

3. தைத்திரீய. ஆன : 6.

4. அடியில் - முதற்காலத்தில், அடியிலே - திருவடிகளில்.

5. பள்ளியிலோதியிருந்தால் - பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றிருந்தால்.

6. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

7. ‘இத்திருவாய்மொழி’ என்றது, ‘உயர்வற’ என்பது முதலாகவுள்ள
  பத்துப்பாசுரங்களையும். பத்துப் பாசுரங்கள் கொண்டது ஒரு பதிகத்தைத்
  ‘திருவாய்மொழி’ என்று அருளிச்செய்வர் என்று முற்கூறியதை நினைவு
  கூர்க.