முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
71

என

என்னில், 1‘இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ என்று அளவிட்டு அறிய முடியாது என்கை. ‘ஆயின், மனன் உணர்வு அளவு இலன் என்பதற்கு மன அறிவினால் அறிய முடியாதவன் என்று கூறின் வரும் குற்றம் உளதோ?’ என்னில், முதலிலே ஞான விஷயம் அன்று என்னில், பொருளே இல்லை என்று வரும் அன்றே? ஆதலால், அணு அளவினதான ஆத்துமாவை அறியுமாறு போன்று, எங்கும் பரந்திருக்கிற இறைவனை அறியப்போகாது என்கை.

    பொறி உணர்வு அவை இலன்-‘பொறி’ என்பன கண் முதலிய உறுப்புகள். அவற்றால் அறியப்படும் பொருள்களின் தன்மையன் அல்லன், ‘எந்த இறைவனை உயிர் அறியாதோ, எந்த இறைவனைப் பூமி அறியாதோ’ என்று இறைவனை அறியமாட்டாமையில் உயிர்ப் பொருளையும் உயிரல் பொருளையும் ஒரு சேரக் கூறியிருத்தலைப் போன்று, ஈண்டும் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவ்விரண்டன் தன்மையிலும் வேறுபட்டவன் இறைவன் என்று அருளிச்செய்கிறார். அதாவது, ‘இறைவன் காணப்படுகின்ற உயிரல் பொருள்களின் தன்மையில் வேறுபட்டிருத்தலைப் போலவே, காணப்படாத உயிரின் தன்மையிலும் வேறுபட்டவன்’ என்றபடி. பிறவிக்குருடன் பொருள்களைப் பார்க்கின்றிலன் எனினும், தெளிந்த பார்வையினையுடையவனும் பார்க்கின்றிலன் எனினும் பார்க்கமாட்டாமையில் இருவரும் ஒப்பு ஆவர் என்க.

    ‘இப்படி இரு பொருள்களின் தன்மையிலும் இறைவன் வேறுபட்டவனாக இருப்பானாயின், அவனை அறிவதுதான் யாங்ஙனம்?’ எனின், இனன் - இப்படிப்பட்டவன் என்னுமித்தனை. ‘இனன்’ என்னுஞ் சுட்டால், முன்னிரண்டு அடிகளிற்கூறிய பொருள்களைக் குறிக்கின்றார் என்றாயினும், மேல் கூறப்போகும் பொருள்களைக் குறிக்கின்றார் என்றாயினும் கொள்க. ‘எப்படிப்பட்டவன்?’ என்னில் உணர் முழுநலம் - உணர் - ஞானம்; நலம் - ஆனந்தம். ‘முழு’ என்பதனை உணர்வோடும் நலத்தோடும் கூட்டுக. கட்டடங்க ஞானமுமாய், கட்டடங்க ஆனந்தமுமாய் இருப்பான். இத்தால், பரமாத்தும சொரூபத்தில் விளக்கம் அற்று இருக்கையோ அனுகூல மற்று இருக்கையோ இல்லை என்கை. இனி, ‘ஆனந்தமாவதும் ஞானத்தின் விசேடம் ஆகையால், ஆனந்தத்தைக் கூறிய போதே ஞானத்தையுங் கூறியதாக முடியும்; ஆதலால். இனன் உணர் முழு

 

1. பிரஹதாரண். 4. 6 : 62.
2. தைத்திரீய. பிருகு. 6 : 1.