முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
103

நிறைந்த இராமாயணத்தை நான் செய்யக்கடவேன்,’ என்று பிரமனது திருவருளைப் பெற்றுக் கூறிய வால்மீகி போன்று, மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மேலுள்ள அனைத்தும் இவர்க்கும் தோன்றாநின்றது. இனி தம் அனுபவங்கள் அனைத்தையும் ஒருசேரக் கூற முடியாது ஆதலானும், சொல்வனவற்றை ஒன்றன் பின் ஒன்றாகவே கூறல்வேண்டும் ஆதலானும், அம்முறையில் ‘ஆயிரம்’ என்கிறார் எனலுமாம். அன்றி, ஆயிரமும் சொல்லியல்லது நிற்க ஒண்ணாத பொருளின் தன்மையாலே அருளிச்செய்கிறார் என்றலும் ஒன்று. இவை பத்தும் வீடே - 1இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன. இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று, ‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.

    ஆக, 2இறைவனுடைய திருவருளால் தமக்குப் பரத்து ஞானம் பிறந்தபடியையும், அந்த ஞானத்துக்குப் பலம் மோக்ஷம் என்னுமிடத்தையும், இப்பதிகத்தில் ஏதேனும் ஒரு படி சம்பந்தமுடையார்க்குப் பலம் தம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச்செய்தார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான்கண்டு
        உயர்வேதம் நேர்கொண்டு உரைத்து - மயர்வுஏதும்
        வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்
        வேராக வேவிளையும் வீடு

(1)

3ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

 

1. ‘வீடு’ என்பதற்கு இரு பொருள் கூறப்படுகின்றன; முதற் பொருள்,
  ‘விடப்பட்டன’ என்பது. இரண்டாவது பொருள், ‘மோக்ஷம்’ என்பது;
  இரண்டாவது பொருள் காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரம்.

2. ‘கரவிசும்பு’ என்றன் முதல் ‘ஆய் நின்ற பரன்’ என்பது முடிய நோக்கிப்
  ‘பரத்துவஞானம் பிறந்தபடியையும்’ என்கிறார். ‘வீடு’ என்பதனை நோக்கி.
  ‘அந்த ஞானத்துக்குப் பலம் மோக்ஷம் என்னுமிடத்தையும்’ என்கிறார். ‘இவை
  பத்தும்’ என்பதனை நோக்கி, ‘இப்பதிகத்தில் ஏதேனும் ஒரு படி
  சம்பந்தமுடையார்க்கு’ என்கிறார்.

3. ஆழ்வார் - நம்மாழ்வார். எம்பெருமானார் - இராமாநுசர். சீயர் - மணவாள
  மாமுனிகள்.