முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
87

நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்றும் சொல்லப்படும். ‘நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். 1ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். 2குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும் செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று 3முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், 4சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன. ‘ஆயின், தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘சுவர்க்கத்தி

 

1. ஆகிருதி - சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய
  பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
  அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது
  அச்சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று
  என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது - ஒரு சொல் தனக்குரிய
  பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்
  செல்வது.

2. ‘குணத்தோடுகூடிய பொருள்’ என்ற இடத்தில், செந்நிறத்தையுடைய பசு
  என்ற பொருள் தோன்றினாலும், பசு என்னும் குணியைக் கொள்ளாது
  ‘செந்நிறம்’ என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று
  என அவ்வாக்கியத்தின் பொருளை விரித்துக்கொள்க.

3. ‘முன் சொல்லுகையாலே’ என்றது, நாலாம் பாசுரத்தில் சொல்லி இருத்தலால்
  என்றபடி.

4. ‘சாமாநாதிகரண்யம் சித்தியாது’ என்றது, ‘எம் திடரே’ என்ற பதத்தினோடு
  பொருள் பொருந்தாது என்றபடி.