முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
88

னின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, 1நிவர்த்திக்கும் அவன் வேண்டுங்காண்,’ என்று அருளிச்செய்தார்.

    என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் - இப்படிப் பல வகையினராக இருக்கையாலே காலம் உள்ள வரையிலும் ஆராய்ந்தாலும் இன்னபடிப்பட்ட தன்மையினையுடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர். என்றும் ஓர் இயல்வொடு நின்ற - 2‘விருஷலவிவாகமந்திரம்போலே என்றும் ஓர் இயல்வொடு நின்றவராவது என்?’ என்னில், என்றும் ஒருபடிப்பட்ட தன்மையினையுடையவர் என்று நினைக்க அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டிருக்கும் என்கை. எம் திடர் - மனிதர்களால் செய்யப்படாத வேதங்களால் சொல்லப்பட்டவன் ஆகையால், வந்த திடத்தின் தன்மையைச் சொல்லுகிறார். இப்படி, சிறந்த திடமான பிரமாணத்தாற்சொல்லப் பட்டவரான நிலை தம்முடைய இலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்

    ‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்’ என்றும், ‘ஓரியல்வினர் என நினைவு அரியவராய்’ என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடர்,’ எனக் கூட்டுக.

(6)

 7

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.

    பொ-ரை : உலகங்களை எல்லாம் முடிவு காலத்தில் அழியச் செய்த இறைவன், திடமான ஆகாயமும் நெருப்பும் காற்றும் நீரும் நிலமும் ஆகிய இவற்றைக் காரணமாகக் கொண்டு படர்ந்த எல்லாப் பொருள்களும் தானேயாகி, அவ்வப்பொருள்கள்தோறும் உடலுக்குள் இருக்கின்ற உயிரைப்போன்று மறைந்து, எங்கும் பரந்தவனாய் ஒளிமிக்க வேதத்துள் தோன்றுகின்றவன் ஆவான்.

 

1. சுவர்க்கத்தினின்றும் விழுதலாகிய தொழில் நிகழ்ச்சிக்கு, வீழாமல் இருத்தல்
  தொழில் நிகழாமை; வீழாமல் இருத்தல் திரிசங்குவிற்கு விருப்பமாயினும்,
  அதனை அவனால் செய்துகொள்ள முடியவில்லை; முனிவர் திருவருள்
  வேண்டியிருந்தது என்பதாம்.

2. ‘விருஷல விவாக மந்திரம்போலே நினைவு அரியவர்,’ எனக் கூட்டுக.
  விருஷலவிவாகமந்திரம் - ஒரு சாதியினர் திருமணம் செய்யும் போது கூறும்
  மந்திரம். அவர்கள் கூறும் மந்திரம் முற்கூறியதற்குப் பிற்கூறுவது
  மாறுபாடுடையது என்பது தோன்றுகிறது.