முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
99

New Page 1

    பொ-ரை : உலகங்களை எல்லாம் கற்பாந்தகாலத்து உண்டு காத்த தலைவன், பரந்திருக்கின்ற குளிர்ந்த சமுத்திரத்திலுள்ள நீர் அணுத்தோறும் பரந்திருக்கின்ற அண்டம் இது என்று கூறும்படி பரந்திருக்கின்றான்; அவ்வாறே பூமி ஆகாயம் இவற்றிலும் எங்கும் பரந்து நிறைந்திருக்கின்றான்; மிகவும் சூக்குமமான உடல்தோறும் அவ்வவ்வுடல்களில் வசிக்கின்ற உயிர்தோறும் கண்களுக்குத் தெரியாதவாறு பரந்திருக்கின்றான் என்றவாறு.

    வி-கு :
‘கரந்த சில்’ என்பதற்கு ‘மிகச் சிறிய’ என்பது பொருள். இடம் - உடல்; தங்குவதற்கு இடமாதலின், உடலை ‘இடம்’ என்றார். கரன் - திடமானவன்; பிரமாணங்களால் வந்த திடம்.

    ஈடு :
பத்தாம் பாட்டு உலகம் சரீரமாய் இருத்தலால் அதனை உடைமைப் பொருளாக உடையனாய், எங்கும் வியாபித்துத் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பான் இறைவன் என்று அருளிச் செய்தார் மேல். ‘இப்படி நிறைந்து நின்றால், உடலின் சேர்க்கையால் 1சேதநனுக்குக் குறைவு வருவது போன்று, இறைவனுக்கும் இவ்வுலக சம்பந்தத்தால் குறைவு உண்டாகுமோ?’ என்னில், அது செய்யாது; குறைவுஅற நிறைந்து நிற்பன் என்று வியாப்தி சௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.

    பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்து உளன் - பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் நீரினது பரமாணுத்தோறும் நிறைந்து நிற்பான். நீரின் பரமாணுக்களின் கூட்டமே கடலாதலின், ‘நீர் தொறும்’ என்கிறார். ‘ஆயின், ஒன்றாகக் காணப்படுகின்றதே?’ எனின், நீர்ச்செறிவாலே திரண்டு தோன்றுகிறது, இத்தனையேயாம். ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. 2‘ஆகாயத்திலும் பெரியன் என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் - அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்

 

1. சேதனன் - அறிவினையுடைய உயிர்.
2. சாந்தோக்கிய உபநிடதம்.