முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
151

New Page 1

வேண்டாதவாறு மிகவும் 1விதேயமாம்படி சமைந்த பிரமன் முதலிய தேவர்களும்.

    யாவையும்-அறிவில் பொருள்களும். யாவரும்-அறிவுடைப் பொருள்களும். தானாம் அமைவுடை நாரணன்-அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் எல்லாம் தான் என்ற சொல்லுக்குள்ளே விசேஷணங்களாய்ச் சேரும்படியான சமைவையுடையன் ஆகையாலே நாராயணன் என்னுந் திருநாமத்தையுடையவன். மாயையை அறிபவர் யாரே - இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின், பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின், நித்தியசூரிகள் பரத்துவத்தை நுகர்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்; சம்சாரிகள் 2நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்; பிரமன் முதலிய தேவர்கள் தத்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்; மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்; தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும் 3‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’ என்கின்றான்; ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

    இனி, ‘தானாம் அமைவுடை நாரணன்’ என்பதற்கு, 4ஒருவன் ஒருவனை ‘உனக்கு ஒரு மாதஜீவனத்துக்கு என்ன வேண்டும்?’ என்றால், தன் மனைவி மக்களையுங் கூட்டிக்கொண்டு ‘எனக்குக் கலநெல் வேண்டும்’ என்கிறான் அன்றே? அப்படியே, இவை அடங்கலும் தன் ‘அஹம்’ சொல்லுக்குள்ளே அடங்க, தான்

 

1. விதேயம்-உரிமை; தத்தமக்கே உரிமையாகும்படி என்றவாறு.

2. நாஸ்திகர் - கடவுள் நம்பிக்கையில்லாதவர்.

3. ஸ்ரீ கீதை, 4 : 9.

4. நாராயணன் என்ற தொகையை வேற்றுமைத் தொகையாகக் கொண்டு
  பொருள் அருளிச்செய்கிறார். ‘ஒருவன் ஒருவனை’ என்று தொடங்கும்
  வாக்கியத்தால். மேல், ‘பிரகாரியான தான்’ என்று தொடங்கும் வாக்கியத்தால்
  அன்மொழித்தொகையாகக் கொண்டு பொருள் அருளிச்செய்தார்.