முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
160

அற

அறிந்தான் ஆனாலும்’ என்று பொருள் கோடலுமாம். இறைநிலை உணர்வு அரிது - சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.

    உயிர்காள் - ‘அறிவற்ற பிறவிகளில் பிறந்ததனால் இழந்து விட்டீர்களோ? அறிவுடைய பிறவியில் பிறந்தும் அதன் காரியம் பிறக்கவில்லையே? அறிவு கேடராய் நீங்கள் இருக்கும் நிலைதான் என்னே!’ என்பார், ‘உயிர்காள்’ என விளிக்கிறார். ‘எங்கள் அறிவும் அறியாமையும் நிற்க; நாங்கள் பற்றுவதற்கு, அறிந்த நீர் அருளிச்செய்யீர்,’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்: அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-தீயாரை அழித்து நல்லாரைக் காக்கின்றவனாதலின், அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்; இருவன் திருநாபிக்கமலத்தில் நேராகத் தோன்றியவனாதலின், அயன் என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான்; ஒருவன் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரையுடையவனாய் இருக்கிறான்; ஒரு உணர்த்தி, சொரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, சுபாவத்தைப் பற்றியது; இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவைதம்மைப் பலகாலும் சொல்லிப் பார்த்து, மனப்பட்டது ஒன்று-1‘இலிங்கத்துக்கே உயர்வு தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று, ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் சொரூபங்களையும் சுபாவங்களையும் பலகாலும் ஆராய்ந்து பார்த்தால், 2கோல்விழுக்காட்டால் ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும். உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால் உணர்ந்து, அவன் திருப்பெயர்களைப் பலகாலும் உச்சரித்து வணங்குங்கோள் என்பதாம்.

(6)

 

1. மற்றைப் புராணங்கள், ஒரு தெய்வத்தின் சிறப்புப் பெயரினைக் கூறி,
  ‘இத்தெய்வத்தின் பெருமைகளை எங்கட்குக் கூறவேண்டும்’ என்று
  முனிவர்கள் கேட்க, அதற்கு ஏற்பக் கூறுகிறார் என்று தொடங்கப்
  பெறுவனவாம். ‘பரம்பொருள் யாவன்? அவனுடைய பெருமைகளை
  எங்கட்குக் கூறவேண்டும்,’ என்று முனிவர்கள் கேட்க, அதற்கு விடை
  கூறுவதாகத் தொடங்கப் பெறுகின்றன, ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ ராமாயணம்
  முதலிய நூல்கள். இவற்றைத் திருவுள்ளத்தே கொண்டு தான் ‘இலிங்கத்துக்கே
  உயர்வு’ என்ற வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.

2. கோல் விழுக்காடு - தானாகவே விழுதல்.