முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
165

    நாளும் நின்று அடும்-நாள்தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற; பரமாணுவைச் சேர்ந்த 1பாரிமாண்டல்யம் முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும், இறைவனுடைய சொரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும் அக்குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, 2உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம.3 ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. 4அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, 5‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம். பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். ‘6தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,

 

1. பாரிமாண்டல்யம்-பரமாணுக்களின் அளவு. நித்திய பரதந்திரம்-என்றும்
  உள்ளதாயும் பிறர்க்கு உரிமைபட்டதாயும் இருத்தல்.

2. காலம் அறியப்படாமல் வருகின்றமையை நோக்கி ‘உடல்களின் சேர்க்கையும்
  நித்தியம்’ என்கிறார்.

3. சாட்யாயன சாகை.

4. ‘அசல் பிளந்தேறிட வந்தன அல்ல’ என்றது, ஒருவர் செய்த நல்வினை
  தீவினைகள் அவரை விட்டு நீங்கி வேறு ஒருவரைச் சார்வன அல்ல
  என்பதாம்.

5. ஸ்தோத்திர ரத்தினம், 25.

6. சாந்தோக்ய உபநிடதம், 5. 25. இங்கு, ‘தாயைக் குடல் விளக்கஞ்செய்த
  தாமோதரனைத், தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால்
  பாடி மனத்தினால் சிந்திக்கப், போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
  தீயினில் தூசாகும்,’ என்ற திருப்பாவை ஒப்பு நோக்கல் தகும்.