முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
176

இவற

இவற்றைக் கற்க வல்லவர்கள் நித்தியசூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த் தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப்பெறுவர்கள். ‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின், 1இப்பத்தைக் கற்ற போதே இவனை நித்தியசூரிகளில் ஒருவனாக நினைப்பன்; பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை. அதாவது, சிறையிலே இராஜகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டிவிடுவாரைப் போன்று, நித்தியசூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி. ‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது; அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று, இவனும் விதிப்படியே செல்ல வேண்டும். இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு, 2ஆதிவாஹிகரோடே விரஜையிலே சென்று 3சூக்கும சரீரமும் நீங்கப்பெறுவர்,’ என்று கூறலுமாம். 4‘அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும் தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,

 

1. இவ்விடத்தில்,

      “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையுந், தெய்வத்துள்
  வைக்கப்படும்,’ என்ற திருக்குறளையும், ‘இல்லறத்தோடு கூடி வாழும்
  இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன் வையத்தானே எனினும் வானின்
  கண் உறையுந் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின்
  தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாதலின்’ ‘தெய்வத்துள்
  வைக்கப்படும்’ என்கிறார்,’ என்ற அதனுரையையும் ஒப்பு நோக்குக.

2. ஆதிவாஹி - சுமந்து செல்பவர். விரஜை - பரமபதத்துக்கு இப்பாலுள்ள
  ஓர் ஆறு.

3. சூக்கும சரீரம் - பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை
  வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம். பத்து வகை
  இந்திரியவுணர்வு-மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியம்
  ஐந்து, வாக்கு பாணி பாதம் பாயுர் உபத்தம் என்னும் கர்மேந்திரியம் ஐந்து
  ஆகிய இப்பத்தின் அறிவுகள். ஐவகை வாயுக்கள் - பிராணன், அபானன்,
  வியானன், உதானன், சமானன் என்பன. காமவினை விளைவுகள்-ஆசையும்
  கரும பலன்களும்.

4. ஸ்ரீ கீதை. 4, 9.