முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
183

New Page 1

சேவலுமாகி, ‘அந்தோ!’ என்று இரங்கி எனக்கு அருள் செய்து கொடிய சிறகுகளையுடைய புள்ளாகிய கருடனைக் கொடியிலே உயர்த்திய இறைவனிடத்தில் யான் விடுகின்ற தூதாகிச் சென்றால், உங்கள் முகம் பார்த்துக் கேளாமையாகிற கொடிய சிறையிலே அவன் வைத்தால், அவ்விருப்புக்கு நீங்கள் இசைந்திருப்பின் உங்களுக்கு அது என்ன குற்றத்தைச் செய்யும்?’ என்கிறாள்.

    வி-கு : ‘நின் சேவலும்’ என்று, பின் ஆண்பாலினைக் கூறுகின்றாளாதலின் ‘நாராய்’ என்னும் விளி பெண்பாலையுணர்த்தும். நாரை என்னும் ஐ ஈறு விளியில் ஆய் ஈறாய்த் திரிந்தது. ‘அளியத்தாய்’ என்னும் இச்சொல் ‘அந்தமிலா அன்பு என்மேல் வைத்தாய் அளியத்தாய்,’ எனக் கம்பராலும் ஆளப்பட்டது. ‘ஆய். அருளி, சென்றக்கால்’ என எச்சங்களை முடிக்க. ‘சென்றக்கால் வைப்பின்’ என இயையும் ‘செயுமோ’ என்றதில் ஓகாரம் எதிர்மறை.

    இத்திருவாய்மொழி, துள்ளல் ஓசையில் வழுவின்றி நாற்சீர் நாலடியாய் வருதலின், தரவு கொச்சகக் கலிப்பா எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டு. தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து, 1என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்குந்தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி ‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்.

    அம் சிறைய-குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள், நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே 2தொடை கொள்ளலாம்படி இருக்கின்றதாதலின், ‘அம் சிறை’ என்கிறாள். 3ஆசாரியனுடைய ஞானத்தை உத்தேசித்துச் சிஷ்யன வணங்குவது போன்று, இவளும் சிறகிலே கண் வைக்கிறாள். மடம்-ஏவிக் காரியங் கொள்ளலாம்படி பணிவு தோன்ற இருந்தது. இனி, ‘புணர்ச்சியாலே

 

1. ‘மடநாராய்’ என்று பேடையை முன்னர் அழைப்பதற்குக் காரணம், ‘என்றும்
  சேவலைக் காரியங்கொள்ளுவார்’ என்று தொடங்கும் வாக்கியம். ஈண்டு.
  ‘நாளும்’ நம் திருவுடை அடிகள்தம் நலங்கழல் வணங்கி’ (1. 3 : 8.) என்ற
  இடத்தில் எழுதிய வியாக்கியானத்தை நினைவு கூர்க.

2. தொடை கொள்ளலாம்படி - அறியலாம்படி.

3. இது, ‘அம்சிறைய மடநாராய்’ என்பதற்கு உள்ளுறைப் பொருள்.