முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
186

விட்டு அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே, 1‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று. புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்; அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

    என் விடு தூதாய் - அவன் ஆள் வரவிட இருக்கக்கடவ எனக்குத் தூதாகி. இனி, ‘பெருமிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது சென்றது போன்றது அன்று, அபலையாய் மிக்க துன்பத்தையுடையளாய் இருக்கிற எனக்குத் தூதாகச் செல்லுதல்’ என்பாள் ‘என் தூதாய்’ என்கிறாள் எனினும் அமையும். 2‘இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள். சென்றக்கால் ‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ 3பலன் சித்திக்கப் புகுகிறது? என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு 4அடிக்கழஞ்சு பெறாதோ?’ என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம். வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது - இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் 5வெள்ளிலை இடாதபோது அவர்கள் வருந்துவார்கள் : அது போன்று, இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள். அவன் வைக்கில், 6‘மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக்காட்டிலும்

 

1. ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 18 : 19.

2. ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

3. ‘பலன் சித்திக்கப் புகுகிறது’ என்றது, இறைவனை நேரிற் கண்டு மகிழ்தல்.

4. அடிக்கழஞ்சு : அடி - ஈண்டுப் பாதத்தைப் பெயர்த்து வைத்தல்; கழஞ்சு -
  பொன் ; அதாவது - மேன்மை பெறுதல் என்றபடி.

5. வெள்ளிலையிடாதபோது - வெற்றிலை கொடாதபோது.

6. ஸ்ரீராமா. அயோத். 2 : 42.