முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
189

வருமளவும் இவள் தரிக்கைக்காக ‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன் பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின், அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம். தாமரைக்கண் பெருமான் - ‘பிரிவில் திருக்கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், இயற்கையான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்; தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள அன்பினாலும் சிவந்திருக்கும்; கட்குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்; அன்றி, பிரிவாலே 1அரையாறுபட்டுச் சிவந்திருக்கும். ‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின், இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ? எங்கே அனுபவித்தால்?’ எனின், முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம், மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம், 2இத்திருவாய்மொழியில் கலவியும் பிரிவும். பெருமானார்க்கு-பிருகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமையாக்கிப்போனபடி. (இங்கே இச்சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.) அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும் உடன்கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும். (இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)

    என் தூதாய் - அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய். அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலேகாணும் கிடக்கிறேன்,’ என்றபடி, உரைத்தக்கால் என் செய்யும்-உரைத்தால் என்ன தீமை உண்டாம்? ‘அவனைக்

 

1. அரையாறு பட்டுச் சிவந்திருத்தல்-பாதி சிவந்திருத்தல்.

2. ‘இத்திருவாய்மொழியில் கலவியும் பிரிவும்’ என்றது, புணர்ச்சியின்றேல் பிரிவு
  இன்றாதலின், இத்திருவாய்மொழியில் பிரிவினைக் கூறிய போதே புணர்ச்சியும்
  போதரும். ‘ஆயின், பிரிவில் அரையாறுபட்டுச் சிவந்திருத்தலை இவள்
  அனுபவித்தாளோ?’ எனின், பெரிய திருவடி எடுத்துக்கொண்டு செல்லும்போது
  பிரிவாற்றாமையாலே புரிந்து புரிந்து நோக்குமே அவன்; அப்போது கண்ணிற்
  சிவப்பு அரையாறுபட்டிருக்கும்; அதனைக் கண்டு அனுபவித்தாள்.