முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
200

New Page 1

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச்செய்தவாறே ‘நாமோதாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன 1‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

    நன்னீலம் மகன்றில்காள் ‘அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீலமகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதினகால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.                                    

 (4)

38

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில்ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே!
மல்குநீர்க் கண்ணேற்குஓர் வாசகங்கொண் டருளாயே.

 

1. ஸ்ரீராமா. சுந். 36 : 30. இங்கு,

  ‘ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன்
  நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவையறு குணங்கள் என்னும்
  பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக
  காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.’

  என்ற அருமைச்செய்யுள் நினைவிற்கு வருகின்றது.         

(கம்ப. யுத். 1603.)

2. பாலி பாய்தல்-பிரிந்து போதல். ஒரு மடை செய்து-ஒரு முகமாக்கி.

3. ‘உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடுஅறுத்துப்
  பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற போதுஎல்லாம்’

(நாய்ச். திரு. 11 : 7.)