முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
228

ஏழுலகு’ என்று லீலாவிபூதியைச் சொல்லிற்றாய், ‘வானோர் இறை’ என்கையாலே நித்தியவிபூதியைச் சொல்லிற்றாய், ‘இப்படி இரண்டு உலகங்கட்கும் நாதனாய் இருக்கின்றவனையன்றோ நான் அழிக்கப் பார்த்தேன்!’ என்கிறார். வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை-வளவியனாய், ஏழ் உலகுக்கும் முதலாய், வானோர் இறையாய் இருக்குமவனை. இனி, ‘வளம் ஏழ் உலகின் முதலாய்’ என்பதனை, ‘வளவியராய், ஏழுலகுக்கும் முதலாய் இருக்கிற வானோர்’ என்று, வானோருக்கு அடைமொழி ஆக்குதலும் ஒன்று. வானோர் வளவியராகையாவது, பகவானுடைய அனுபவத்தில் ஆற்றலுடையராய் இருத்தல். ‘ஏழ் உலகுக்கும் முதலாய வானோர், எனின், நித்தியசூரிகள் உலகிற்குக் காரணர் ஆகவேண்டுமே? அங்ஙனம் ஆவரோ?’ எனின், இறைவன், 1ஸ்ரீகௌஸ்துபத்தால் உயிர்களின் கூட்டத்தை தரிக்கின்றான் என்றும், ஸ்ரீவத்ஸத்தால் மூலப் பிரகிருதியினையும் அதனின்றும் உண்டான ஏனைய பொருள்களையும் தரிக்கின்றான் என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அஸ்திரபூஷண அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதனால், அவர்களும் உலகிற்குக் காரணர் ஆவார்கள் என்க. 2நித்தியசூரிகள் தேசிகர் ஆகையாலே துறை அறிந்தே இழிவர்கள் ஆதலின், ‘வானோர் இறையை’ என்கிறார். ‘ஸ்வாமி’ என்றே ஆயிற்று அவர்களுக்கு நினைவு. ‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து, ‘அருவினையேன்’ என்கிறார். தார்மிகனாய் இருப்பான் ஒருவன், இராசத தாமத குணங்கள் மேலிடப்பட்டவனாய் வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று வருந்துகிறார். இப்போது ‘அருவினை’ என்கிறது-‘கள்வா’ என்

 

1. புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்
      பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
  தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள்
      சார்ங்கஞ்சங் காகமனத் திகிரி யாக
  இருடிகங்க ளீரைந்துஞ் சரங்க ளாக
      இருபூத மாலைவன மாலை யாக
  கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்
      கரிகிரிமே னின்றனைத்துங் காக்கின் றானே.

  என்ற திருப்பாசுரத்தின் பொருளை ஈண்டுச் சிந்தித்தல் தகும். ஸ்ரீதேசிகப்
  பிரபந்தம் - அதிகார சங். 41.

2. ‘இவ்வுலகத்திற்குக் காரணனாய் இருக்கிறான்’ என்று கூறி,
  நித்தியசூரிகளுக்குத் தலைவனாகச் சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார்,
  ‘நித்தியசூரிகள் தேசிகர் ஆகையாலே’ என்று தொடங்கும் வாக்கியத்தால்.