முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
241

எம

எம்பெருமானே - அவன் என் நாயனே. 1உடைமை தப்பிப் போகப் புக்கால் உடையவர்கள் ஆறியிருப்பர்களோ? பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள், அவன் நடக்க வல்லனான சமயத்திலே, ‘வேறு தேசம் போவேன்’ என்றால் விட்டு ஆறியிராள் அன்றே? அப்படியே, நெடுநாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக்கொண்டு நான் அகன்று போகப் புக்கால், அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார், ‘எம்பெருமானே’ என்கிறார்.

(4)

49

        மானேய் நோக்கி மடவாளை
            மார்பிற் கொண்டாய் மாதவா!
        கூனே சிதைய உண்டைவில்
            நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
        வானார் சோதி மணிவண்ணா!
            மதுசூ தா! நீ அருளாய்உன்
        தேனே மலரும் திருப்பாதம்
            சேரு மாறு வினையேனே, 

   
    பொ-ரை :
மானின் பார்வை போன்ற பார்வையினையுடையளாகிய திருமகளை மார்பில் தரித்தாய் ஆதலின், ‘மாதவன்’ என்னும் திருப்பெயரையுடையவனே, மந்தரையினுடைய முதுகின் வளைவுமட்டும் போகும்படி உண்டைவில்லால் மார்பில் அடித்தவனான கோவிந்தனே, மோக்ஷ உலகம் முழுவதும் நிறைந்த ஒளியினையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனே, மது என்னும் அரக்கனைக் கொன்றவனே, உன்னுடைய தேன் மலர்கின்ற திருவடித்தாமரைகளை வினையேன் சேரும்படி திருவருள் புரிவாய்.

    வி-கு : ‘நோக்கி’ என்பது இகரவீற்றுப் பெண்பாற்பெயர். ‘கூனே’ என்பதில் ஏகாரம் பரிநிலை. கோவிந்தன்-ஸ்ரீராமன்; பூமியைக் காப்பவன் என்பது பொருள்; கோ - பூமி. ‘தொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு அரங்க ஓட்டி உன்மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.) என்பர் திருமழிசை மன்னனும். ‘திருப்பாதம் வினையேன் சேருமாறு நீ அருளாய்,’ எனக் கூட்டுக.

 

1. இப்பாசுரத்தின் முன்னுரைக்குச் சேரக் கருத்தை அருளிச் செய்கிறார்,
  ‘உடைமை தப்பிப்போகப் புக்கால்’ என்று தொடங்கும் வாக்கியத்தால்.