முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
243

New Page 1

போன்று, ‘ஸ்ரீ’யோடு சம்பந்தம் இல்லாதிருக்கவும் ‘ஸ்ரீமான்’ என்ற பெயரைத் தரித்திருக்கின்ற பிறறைப் போல அல்லன் இறைவன் என்பார், ‘மார்பிற்கொண்டாய் மாதவா’ என்கிறார். மடவாளை மார்பிற்கொண்டவனாயிருப்பதனால், அருளுவிப்பாரும் அருகே இருக்க ‘எனக்கு அருளாய் என்று வேண்டுவது என்?’ என்றபடி.

    கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-வனவாசத்திற்குக் காரணமான குப்ஜையைச் சொல்லிற்றாய், இளமையில் சுண்டுவில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார். அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார். அன்றி, 1தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே 2‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,

 

1. கூன் சிதைய உண்டை வில்லால் நிறத்தில் தெறித்தவன் ஸ்ரீராமனாயினும்,
  அச்செயலை அவன்மேல் ஏற்றுதற்கு மனமின்றிக் ‘கோவிந்தா’ என்று
  கிருஷ்ணன்மேல் ஏற்றுகிறார் என்பது கருத்து.

2. ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்றது, ஒரு கள்ளன் ஒரு
  பிராமணன் வீட்டில் கன்னம் இட, அது ஈரச்சுவராகையாலே
  இறுத்திக்கொண்டு இறக்க, அவ்வளவில் அவன் உறவினர் வந்து
  பிராமணனைப் பழிதரவேண்டும் என்ன, இரண்டு திறத்தாரும் அரசன் பக்கல்
  போக, அவ்வரசனும் அறிவற்றவனாய் மூர்க்கனுமாகையாலே, ‘பிராமணா, நீ
  ஈரச்சுவர் வைக்கையால் அன்றோ அவன் இறந்தான்? ஆகையால், நீ
  பழிகொடுக்க வேண்டும்’ என்ன, ‘எனக்குத் தெரியாது; சுவர் வைத்த
  கூலியாளைக் கேட்கவேண்டும்’ என்ன,  அவனை அழைத்து, ‘நீயன்றோ
  ஈரச்சுவர் வைத்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவனும்
  ‘தண்ணீர் விடுகிறவன் போரவிட்டான்; என்னாற் செய்யலாவது என்?’
  என்ன, அவனையழைத்துக் கேட்க, அவனும் ‘குசவன் பெரும் பானையைத்
  தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவனையழைத்துக் கேட்க,
  அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேசி போகவரத் திரிந்தாள்;
  அவளைப் பார்க்கிற பராக்கிலே பானை பெருத்தது’ என்ன, அவளை
  யழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான்
  புடைவை தாராமையாலே போகவரத் திரிந்தேன்,’ என்ன,
  அவனையழைத்துக்கேட்க, அவனும், ‘என்னால் அன்று; துறையில் கல்லில்
  ஓர் அமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று,’
  என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ‘நீயன்றோ
  இத்தனையும் செய்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவன் மௌனி
  ஆகையாலே பேசாதிருக்க, ‘உண்மைக்கு உத்தரம் இல்லை என்று
  இருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்,’ என்று, அரசன் அவன் தலையை
  அரிந்தான் என்பது கதை.