முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
248

New Page 1

    பொ-ரை : ‘எத்துணை மேம்பட்ட ஞான முடையவர்களும் தமது முயற்சியால் காணும் அன்று அறிதற்கு அரியவனும், வாசனை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை அணிந்தவனும் கண்ணபிரானும், தன்னையடைந்த அடியார்கட்கு நோய் பொருந்திய சரீர சம்பந்தத்தை நீக்குகின்ற திருமகள் கேள்வனும் ஆன எம்பெருமானை நினைந்து, மிகச் சிறிய அறிவினையுடைய யான், அடியேன் என்று அலற்றுவன்; காண்பதற்கு அலற்றுவன்; இதைக்காட்டிலும் மேம்பட்ட அறிவுண்மை ஒன்று உளதோ?’ என்கிறார்.

    வி-கு : செடி - தீவினைகள்; ஈண்டு, அவற்றான் ஆயநோய்கட்கு ஆயிற்று. ஆக்கை-எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; உடல். ‘அடியாரை’ என்பது உருபு மயக்கம். மிக்க ஓர் என்பது-மிக்கோர் என வந்தது, விகாரம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்; அவனைப் பார்த்து ‘நம்மால் வருகுணத்தின் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

    அடியேன் சிறிய ஞானத்தன் - சம்சாரிகளில் அறிவு கேடர் ‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு! ‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே. அன்றி, ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று; ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. ‘நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம். சிறிய ஞானத்தன் - மிகச் சிறிய அறிவினையுடையவன். அறிதல் ஆர்க்கும் அரியானை-எத்துணை வியக்கத்தக்க அறிவினையுடையராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் இயற்கையிலேயே முற்றறிவினையுடைய தனக்கும் அறியப் போகாதவன்; 2‘தனக்கும் தன் தன்மை அறிவு அரியான்’ அன்றோ?

 

1. ‘இதனின் மிக்கோர் அயர்வுண்டோ?’ என்றதனை நோக்கி அவதாரிகை,
  ‘அடியேன் சிறிய ஞானத்தன்’ என்று தாழ்வினை நினைந்து அகலுகையாலே
  முகங்காட்டினமை சித்தம். ‘நம்மால் வரும் குணத்தின் மேன்மையும்
  இவனுக்கு வேண்டா’ என்றது, தாழ்ந்தவனான என்னை அங்கீகரிக்கையால்
  வரும் சர்வாதிகாரத்துவ ரூபமான குணத்தின் மேன்மையும் இறைவனுக்கு
  வேண்டா என்றபடி.

2. திருவாய். 8. 4 : 6.

  ‘என்னைநீ இகழ்ந்தது என்றது எங்ஙனே! ஈச னாய
   உன்னைநீ உணராய்; நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை?’

  என்ற செய்யுள் ஒப்பு நோக்கல் தகும்.

(கம்ப. யுத். 606)