முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
256

    ஈடு : பத்தாம் பாட்டு. 1இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரமபதத்தை அலங்கரிக்கத் தொடங்கினான்.

    சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து - 2‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார், மாயப் பற்று அறுத்து-ருசி வாசனைகளையும் கழித்து. 3தீர்ந்து - தான் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய். இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம். வீடு திருத்துவான் - கலங்காப் பெருநகரத்துக்கும் ஒருபுதுமை பிறப்பியநின்றான்.

    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி - பரிபூர்ண ஞான ஒளியனாய். அகலம் கீழ் மேல் அளவு இறந்து-பத்துத்திக்குகளிலும் நிறைந்து. நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம்-மிக்க சூக்ஷ்மமான உயிர்ப்பொருள் உயிரல்பொருள்கட்கும் ஆத்துமாவாய் இருக்கிற. இனி, இதற்குப் பல பக்கங்களிலும் வெளிப்படையாகக் காணப்படுகிற அசித்து சித்து இவற்றிற்கு உயிராய் இருப்பவன் என்று பொருள் கூறலும் ஒன்று. நெடுமால்-இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் என்கிறார். இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வலைவாரைப் போன்று இவரைத்திருத்துகைக்காகப்பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார் எனலுமாம்.

 

1. ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’ என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீ ரங்க கத்யம்.

3. இறைவனும் ஆழ்வாரும் என்னும் இருவருடைய தொழிலாகவுங் கொண்டு
  ‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.
  முதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு
  திருத்துவானானான்’ எனக் கூட்டுக. இரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து
  வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக. முதற்பொருளில்,
  இறைவன் தொழில்; இரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்.