முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
275

என

என்கிறார். 1கரும்பு தின்னக்கூலி போன்று ஒரு பலன் இன்றே யாயினும் தொழுகைதானே பலன் ஆதலின், ‘தொழுமின்’ என்றவர், மீண்டும் ‘தொழுதால்’ என்கிறார். இப்படிச் செய்தால், வழி நின்ற வல்வினை மாள்வித்து - இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். அழிவு இன்றி ஆக்கம் தரும் - 2‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

(8)

64

        தரும அரும்பய னாய
        திருமக ளார்தனிக் கேள்வன்
        பெருமை யுடைய பிரானார்
        இருமை வினைகடி வாரே.

   
பொ-ரை :
தருமங்களினுடைய கிடைத்தற்கு அரிய பயன்கள் எல்லாம் ஒரு வடிவு கொண்டது போன்று இருக்கின்ற பெரிய பிராட்டி யாருக்கு ஒப்பற்ற கணவர்; திருமகள் கேள்வர் ஆகையாலே, வந்த ஒப்பற்ற பெருமையினையுடைய உபகாரகர்; ஆதலால், இருவினைகளையும் நீக்குவார்.

    வி-கு : ‘இருமை’ என்பது, இரண்டின் தன்மையை உணர்த்தாமல் இரண்டு என்னும் எண்ணையே உணர்த்திற்று. ‘இருமை’ என்பதில் ‘மை’ பகுதிப்பொருள் விகுதி. ‘இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்’ என்ற திருக்குறளும், ‘தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன்’ என்புழிப்போல, ‘இருமை’ என்பது ஈண்டு எண்ணின்கண் நின்றது,’ என்ற பரிமேலழகர் உரையும் ஈண்டு நோக்கல் தகும்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘தன்னைப் பற்றின் அளவில் இப்படி விரோதிகளைப் போக்கி இப்பேற்றினைத் தரக்கூடுமோ?’ என்னில்,

 

1. ‘கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல்
  பிறவாற்றான் இன்மையின் ‘அதனையே காமுறுவர்’ என்று கூறினார்.’
  (திருக்குறள். 399. பரிமேலழகருரை.)

      ‘கரும்பயிலக், கூலி கொடுக்குங் குலத்தோன்றல்’ (சிவப்பிர. பிரபந்.    
  திருவெங்கையுலா.) என்பன ஈண்டு நினைத்தல் தகும்.

2. சாந்தோக். உபநிட. 8 : 15.