முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
295

New Page 1

‘முன் வெள்ளத்து அழுந்தின காலத்து வராகமாய்க் கருமையும் வன்மையுமுடைய கழுத்தால் தாங்கி இவ்வுலகத்தை அவ்வெள்ளத்தினின்றும் எடுத்துத் திருத்திய தொழில் மேருவின் தொழிலோடு ஒக்கும்’ என்ற பரிபாடற்பகுதியும் அதனுரையும் ஈண்டு நினைத்தல் தகும். ஒட்டுதல் - சம்மதித்தல்; ‘ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்’ (சிலப். 21 : 37.) என்ற இடத்தும், ஒட்டுதல் என்பது இப்பொருள்படுதல் காண்க.

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘இப்போது ‘விடோம்’ என்கிறீர் இத்தனை போக்கிப் 1பின்னையும் நீர் அல்லீரோ? உம்முடைய வார்த்தையை நம்புதற்கு உளதோ?’ என்ன, ‘அவனாலே அங்கீகரிக்கப்பட்ட நான் அவனை விடுவேனோ?’ என்றார் மேல் பாசுரத்தில்: ‘உம்மை அவன் தான் விடில் செய்வது என்?’ என்ன, ‘தன் குணங்களாலும் செயல்களாலும் என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை விட நான் உடன்படுவேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    பிராஅன் - நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன். எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை நினைத்துப் ‘பிராஅன்’ என்கிறார். அதனை விரிக்கிறார் மேல்: பெருநிலம் கீண்டவன் - பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று, சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன். இது எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் செய்த உபகாரம். பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் - நெருங்கத் தொடையுண்டு வாசனை மிக்குள்ளதாய், செவ்வி பெற்று இருந்துள்ள திருத்துழாய் மாலையாலே சூழப்பட்ட திருமுடியையுடையவன். விரை - வாசனை. விராய் என்றது, நீட்டும் வழி நீட்டல் விகாரம். இனி, ‘மலர் விராய்’ என்பதற்கு, மலர்கள் கலந்த’ என்று பொருள் கூறலுமாம். இதனால், ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான் என்பதனைத் தெரிவித்தபடி.

    மராமரம் எய்த மாயவன் - மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து, ‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன். இது அடியார் விஷயமாகச்செய்த

 

1. ‘பின்னையும் நீரல்லீரோ’ என்றது-‘வளவேழுலகு’ என்னும் திருப்பதிகத்தை
  அருளிச்செய்த ஆழ்வீர் அல்லீரோ?’ என்றபடி.