முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
297

வார்த்தையை நம்பப்போமோ?’ என்ன, ‘நான் அவனை விட்டாலும், அவன் தான் என்னை விடான்’ என்கிறார்.

    யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் - நான் இசைந்து ‘என்னுடைய மனத்தில் இருத்துவேன்’ என்றிலேன். ‘இசைவு என்னால் வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்ததாவது?’ என்றபடி. தான் ஒட்டி வந்து 1‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார். என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து - தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப்போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். 2இயல்வான் - இப்படியைத் தன்மையாக உடையவன். அன்றி, ‘இயல்வான்’ என்பதற்கு, இப்படி எதிர்சூழல் புக்கு முயன்றவன்’ என்று பொருள் கூறலுமாம். ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே - இப்படிக் காரணம் இல்லாமல் என்னை அங்கீகரித்தவன், நான் தன் பக்கல் நின்று நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் இசைவானோ? இனி, ‘எனக்கு ஞானம் பிறத்தற்கு முயன்றவன். பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் உடன்படுவேனோ?’ என்று கோடலுமாம்.

(7)

 

1. ஸ்ரீராமா. யுத். 21 : 8.

2. ‘இயல்வான்’ என்பதற்கும், ‘ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே’
  என்பதற்கும் அருளிச்செய்த இருவகைப் பொருள்களையும் நிரலே
  பொருத்திக்கொள்க.