முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
307

ஆர

ஆர்ஜவமாம். ‘ஆயின், தாங்குதல் வாகனத்துக்குத் துக்கத்தைத் தருவது அன்றோ?’ என்னில், மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன்மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு. ‘ஆயின், பெரிய திருவடியின்மேல் எழுந்தருளல் அங்கு உள்ளார்க்குக் காட்சி கொடுத்தற்காக அன்றோ?’ எனின், பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய சொரூப லாபத்துக்காகவும் இருக்கும். மற்றும், காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் 1போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். 2‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

   
சூடும் தண் துழாய் - திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும் அளவில் அப்போதே பறித்துத் திருக்குழலிலே வைப்பன். ‘ஆயின், துழாய்க்கு அறிவு உண்டோ?’ எனின், 3‘மலர்மாலைகள், பீதாம்பரம், ஆபரணங்கள் முதலானவைகள் திருமாலினுடைய திருமேனிக்குத் தக்கவைகளாகவும், ஒப்பு அற்றவைகளாகவும் ஞானத்தோடு கூடினவைகளாகவும், வேறு ஒன்றன் துணையின்றித் தாமே பிரகாசிக்கின்றவைகளாகவும் இருக்கின்றன,’ என்னும் பௌஷ்கர சம்ஹிதை இங்கு அறிதல் தகும். ‘ஆயின், நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்கவேண்டாவோ?’ எனின், 4அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய்

 

1. போக சின்னங்கள் - புணர்ச்சிக்காலத்துத் தனங்கள் முதலியவற்றில்
  உண்டாகும் வடுக்கள். ‘இலங்குஓளி வயிரப் பைம்பூண் இளமுலைவடுக்கண்டு
  ஏங்கிப், பொலங்கொடி நாணி னோடும் பொய்த்துயில் கூர்ந்தாள் அன்றே’
  (நைடதம், மணம். 42.) என வருவது காண்க.

2. ஸ்தோத்திர ரத்நம், 41.

3. பௌஷ்கர சம்ஹிதை. இங்கு ‘ஞானத்தோடு கூடினவைகளாயும்’ என வருதல்
  ஓர்தல் தகும்.

4. ‘கூனும் குறளும் ஊமும் கூடிய, குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர’
  (சிலப். வழக்.) என்னும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.