முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
314

New Page 1

    பொ-ரை : ஏழ் எருதுகளையும் அடர்த்துக் கொன்றான்; எழுவகைப்பட்ட உலகங்களையும் புசித்தான்; குளிர்ந்த பரமபதத்தில் செய்யும் விருப்பத்தை என்னிடத்தில் செய்து என் எண்ணத்தின்படியே தான் ஆனான்.

    வி-கு : தாமம் - இடம், ‘தண்’ என்ற அடைமொழி மோக்ஷ உலகத்தைக் குறிக்க வந்தது.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘ஆவி நலம் கொண்ட அளவேயோ? பரமபதத்தில் செய்யும் அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

    ஏழ் விடை கொண்டான்-நப்பின்னைப் பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாய் இருந்த இடபங்கள் ஏழனையும் வென்றான். ‘இன்ன படைவீட்டை வென்றான்’ என்று கூற வேண்டுவதனை ‘இன்ன படைவீட்டைக் கொண்டான்’ என்று கூறுவது போன்று 2‘ஏழ்விடை கொண்டான்’ என்கிறார். உண்டான் ஏழ் வையம்-பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகாவிடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான். இவற்றால் ‘தனக்குச் சிநேகிகளாய் இருப்பார்க்குச் செய்யுமதும் செய்தான்; தான் செய்யும் இரட்சணத்தை விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான்,’ என்பனவற்றைத் தெரிவித்தபடி. அதற்குமேல், தண் தாமம் செய்து - குளிர்ச்சியையுடைத்தான பரமபதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான். இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு, 3இவ்வுலகில் இருக்கிற என்னைப் பரமபதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ என்று பொருள் கூறலுமாம்

    என் எண் தான் ஆனானே - நான் விரும்பியபடியே எனக்குக் கைபுகுந்தான். இனி, இதற்கு, ‘என் விருப்பத்தைத் தான் கைக்கொண்டான்,’ என்று கூறலுமாம். அதாவது, 4‘மாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’ 5‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே, ‘வைகுண்டத்திற்குச்

 

1. ‘தண்தாமம் செய்து’ என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்.

2. ‘செருமலைந்து களங்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்’ (அகம். 227.
  10-11.) என்ற இடத்துக் ‘கொள்’ என்பது இப்பொருளில் வருதல் ஒப்பு
  நோக்குக.

3. இப்பொருளில் ‘தாமம்’ என்பது இடவாகுபெயர்.

4. திருவாய். 9. 3 : 7.

5. திருவிருத்தம். 47.