முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
316

கிருஷ்ணாவதாரம் அயர்வறும் அமரர்கள் அதிபதியைப் போன்று இருப்பது ஒன்று அன்றே? இவற்றிற்குக் காரணம் என்? என்னில், 1தானாய சங்கே-என்பக்கல் தனக்கு உண்டான அன்பின் மிகுதியே. இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள் மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம். இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ! 2‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.

(8)

86

        சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்
        எங்கும் தானாய, நங்கள் நாதனே.


    பொ-ரை :
எல்லா இடங்களிலும் தானாகவே இருக்கிற நம்முடைய பெருமான், பாஞ்சஜன்னியம் என்னும் சங்கையும் சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் அழகிய கையிலே தரித்திருக்கிறான்.

    வி-கு : ‘அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள்’ (சிந். 1932.) என்புழிக் ‘கள்’ அசைநிலையாயது போன்று, ஈண்டும் ‘நங்கள் என்பதில் ‘கள்’ அசைநிலை.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3‘இறைவன் இப்படி அவதரிக்குமிடத்து இறைமைக்கு உரிய அடையாளங்களோடே வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.

    சங்கு சக்கரம் அம் கையில் கொண்டான் - 4சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள்தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து

 

1. ‘தானாய’ என்பதற்கு இரு வகையான பொருள் அருளிச் செய்கிறார்.
  முதற்பொருளில், பெயரெச்சம்; இரண்டாவது பொருளில், வினையாலணையும்
  பெயர். ‘சங்கே’ என்பதற்குக் கூறும் பொருள் வகையுள், முதற்பொருள்,
  அன்பு என்பதாம்; இரண்டாவது பொருள், ஓர் எண்ணல் அளவுப்பெயர்;
  மூன்றாவது பொருளும் எண்ணல் அளவுப் பெயராயினும், ஏகாரத்திலே
  பொருள் நோக்கு.

2. ஸ்ரீகீதை. 4 : 5.

3. ‘சங்கு சக்கரம் அங்கையிற்கொண்டான், எங்கும் தானாய’ என்கிற
  பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

4. ‘சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள்’ என்றது, ‘ஆட்கொள்ளத் தோன்றிய
  ஆயர்தங் கோவினை’ என்கிறபடியே, அடிமை கொள்ளுதலைக் குறித்தது.