முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
321

ஒருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னையும் 1குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற, இவரும் அவனை 2எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார். 

89

        இவையும் அவையும் உவையும்
            இவரும் அவரும் உவரும்
        யவையும் யவரும் தன்னுள்ளே
            ஆகியும் ஆக்கியும் காக்கும்
        அவையுள் தனிமுதல் எம்மான்
            கண்ண பிரான்என் அமுதம்
        சுவையன் திருவின் மணாளன்
            என்னுடைச் சூழ லுளானே.


    பொ-ரை :
அண்மையிலுள்ளவையும் சேய்மையிலுள்ளவையும் நடுவிடத்துள்ளவையுமான அஃறிணைப்பொருள்கள் அனைத்தையும், அண்மையிலுள்ளவர்களும் சேய்மையிலுள்ளவர்களும் நடுவிடத்துள்ளவர்களுமான உயர்திணைப்பொருள்கள் அனைத்தையும், ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கி இருக்கும்படி அழித்தும், பின்னர் அவற்றை உண்டாக்கியும், உண்டாக்கிய பொருள்களைக் காத்தும், அவ்வவ்வுயிர்களுக்குள் உயிராய்த் தங்கியும் இருக்கின்ற ஒப்பற்ற காரணன், என் தலைவன், கண்ணனாய் அவதரித்தவன், எனக்கு அமிர்தம் போன்றவன், இன்பமயமானவன், திருமகள் கேள்வன் ஆன இறைவன் என் எல்லையில் இருக்கின்றவனானான்.

    வி-கு : ‘இவையும் அவையும் உவையும் ஆகிய யவையும்’ எனவும், ‘இவரும் அவரும் உவரும் ஆன யவரும்’ எனவும் கூட்டுக. ‘யவை, யவர்’ என்பன, ‘யாவை, யாவர்’ என்ற சொற்களின் விகாரம்.

 

1. குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு. ‘என்னுடைச்
  சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்
  ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.

2. ‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா
  இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை
  நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.