முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
327

    ஈடு : மூன்றாம் பாட்டு, 1‘திருவடி திருவனந்தாழ்வான் பிராட்டிமார் தொடக்கமானாரோடு ஒவ்வொரு வகையால் பரிமாறுமவன், என் அளவில் ஒரு வகையில் பரிமாறி விடமாட்டுகின்றிலன்,’ என்கிறார்.

    அருகல் இல் ஆய பெருஞ்சீர் அமரர்கள் ஆதி முதல்வன் - அருகல் - குறைதல்; அதாவது, கேடு. இல் என்பது, இல்லாமை. ஆய-ஆன; கேடு இல்லாதான என்றபடி ஆக, 2ஹேயப் பிரத்திய நீகமுமாய்க் கல்யாண ஏகதானமுமான எல்லை இல்லாத குணங்களையுடையனுமாய், அக்குணங்களை நித்தியசூரிகளை எப்பொழுதும் அனுபவம்பண்ணுவிக்குமவனுமாய், அவர்கள் சத்து முதலானவைகள் தன அதீனமாம்படி இருக்கிறவன். கருகிய நீலம் நன்மேனி வண்ணன் - கறுத்து நெய்த்துப் பேச்சுக்கு நிலம் அல்லாதபடி வேறுபட்டு இருக்கின்ற திருமேனியில் நிறத்தையுடையவன். இனி, இதற்கு, ‘வேறுபட்ட திருமேனியில் கறுத்து நெய்த்த நிறத்தையுடையவன்’ என்று கூறலுமாம், 3ஆக, இதனால், நித்தியசூரிகளை எப்பொழுதும் அனுபவம் பண்ணி வைக்கும்போது 4படி விடும்படியை அருளிச்செய்தாராயிற்று. செந்தாமரைக் கண்ணன் - அகவாயில் குணங்களுக்கு விளக்கங்களான திருக்கண்களையுடையவன். பொருசிறைப் புள் உவந்து ஏறும் - சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து, ‘வா’ என்று அழைத்தால், அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான மகிழ்ச்சியினால், பெருக்காறு சுழித்தாற்போன்று தன்னில் தான் பொருகின்ற சிறகையுடை

 

1. ‘பொருசிறைப் புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக்கேள்வன், ஒரு கதியின்
  சுவை தந்திட்டு ஒழிவிலன்,’ என்றதனை நோக்கி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ஹேயம் - தள்ளத்தக்கவை; பிரத்தியநீகம்-மாறுபட்டவை; ஆக,
  தள்ளத்தக்கவைகட்கு மாறுபட்டவை என்றதனால், ‘கொள்ளத்தக்கவை’
  என்பதாம். கல்யாண ஏகதானம் - மங்களங்கட்கெல்லாம் ஓரே இடம்.

3. ‘கருகிய நீலம் நல் மேனி வண்ணன்’ என்பதற்கு அருளிச் செய்யும்
  பொருள்கள் இரண்டனுள், முதற்பொருளில் ‘கருகிய நீலம் நல்’ இம்மூன்று
  சொற்களும் வண்ணத்திற்கு அடைமொழி. இரண்டாம் பொருளில், ‘கருகிய
  நீலம்’ என்னும் இரண்டும் வண்ணத்திற்கும், ‘நல்’ என்பது மேனிக்கும்
  அடைமொழிகள்.

4. இங்குப் ‘படி’ என்பது சிலேடை; ‘ஜீவனமும், திருமேனியும்’ என்பது
  பொருள். ‘படி அளக்கிறானோ?’ என்பது உலகவழக்கு, திருமேனி என்ற
  பொருளில் ‘படிமை’ என்பது சொல்.

5. ‘அவன் மடிமேல் வலந்தது பாம்பு’ (பரி. 4 : 43) என்ற பகுதியையும்,
  ‘இன்னும், அது கடவுட் கொடி’ என்பது தோன்ற ‘அவன்’ என
  உயர்திணையாற்கூறினார்,’ என்னும் பரிமேலழகர் உரையும் ஈண்டு
  நோக்கல் தகும்.