முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
332

திட வாங்கி உயிர் செக உண்ட’ என்றும், ‘செக்கம் செக உண்ட’ என்றும், தனித்தனியே கூட்டுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய், எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ள இறைவன் என் மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.

    ஒக்கலை வைத்து - பரிவுடைய யசோதைப்பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப்பால் உண் என்று தந்திட - 'முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; 1‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், 2கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார். இனி, 3தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம். வாங்கி - அவள் முலை கொடாவிடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று, இவனும் முலை உண்ணாவிடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார். சொக்கம் செக-மரணம். இனி, இதற்கு, ‘சீறின் சீற்றம் அவள்தன் பக்கலிலே பலிக்கும்படி’ என்று கூறலும் ஆம். செக்கம்-சிவப்பு; ஆதாவது, சீற்றம்:

 

1. ஸ்ரீராமா. யுத். 17 : 5.

2. ‘கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று
   இருத்தலால் ‘தந்திட’ என்கிறார்’ என்ற விசேட உரையை,

  “அவற்றுள்,

  தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
  தன்மை முன்னிலை யாயீ ரிடத்த”

(தொ. சொ. 29.)

  என்ற சூத்திரத்தைத் திருவுள்ளத்திற்கொண்டு அருளிச்செய்கிறார். ‘தந்திட’
  என்ற சொல் தன்மை இடத்திற்கு வரும்.

3. ‘தருகை-கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்கிறார் எனலுமாம்’
  என்றது,

  “செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
   நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லும்
   தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
   அம்மூ விடத்தும் உரிய என்ப”

(தொ. சொ. 28.)

  என்ற பொதுச் சூத்திரத்தைத் திருவுள்ளத்திற்கொண்டு என்க.