முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
336

New Page 1

    பொ-ரை : இரண்டு தோள்களிலும் சிறந்த மார்பிலும் ஒலியையுடைய திருமுடியிலும் இரண்டு திருவடிகளிலும் அணிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயினையுடைய தலைவன். தனக்கு உவமையாகப் பொருந்தத் தக்க பொருள் ஒன்றும் இல்லாதவன், மிக்க ஒளி பொருந்திய வடிவினையுடையவன், எப்பொழுதும் என்னைச் சேர்ந்து சிறிதும் அகலாதவன் ஆன எம்பெருமான் என் நாவினுள் இருக்கின்றவன் ஆனான்.

    வி-கு : ‘மேல்’ என்பது ஏழனுருபு கேள் என்பது கேழ் என்றதன் விகாரம். கேழ்-ஒப்பு; ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா’ (கம்பராமா.) என்றவிடத்து, ‘கேழ்’ இப்பொருட்டாதல் காண்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார். ‘ஆயின், இவர் உகந்தபடியே இறைவன் வருதற்குக் காரணம் யாது?’ எனின், தம்மால் காதலிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், அவர்கள் விரும்புகிறவாறே பூசிப்புலர்த்தித் தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று, ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் இறைவனும் ஆழ்வார் விரும்பிய வாறே திருத்துழாயால் தன்னை அலங்கரித்துக்கொண்டு சென்றான். இவர் உகப்பதும் திருத்துழாயே, அவன் கொடுப்பதும் திருத்துழாயே அன்றோ? 1‘புள்ஊர்தி கள் ஊரும் துழாய்க் கொயல்வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர். ‘எங்ஙனம்?’ எனின், திருத்தாயார் கூறும் போதும் 2‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர். இவள் தானும் 3‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 4‘கண்ணன் கழல்துழாய் பொன்செய் பூண்மென் முலைக்கு என்று மெலியும்’, இறைவனும், 5‘தன் மன்னு நீள்கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே, இவளுக்கு அன்றி நல்கான்.

 

1. திருவிருத்தம். 24.

2. திருவாய். 2. 4 : 5.

3. திருவாய். 2. 4 : 9. இப்பாசுரம் தாயார் கூற்றேயாயினும், ‘என்னும்’ என்று
  மகள் ஆசைப்படுவதாகக் கூறுவதால் மகள் கூற்று என்னக்குறையின்று.

4. திருவாய். 4. 2. : 10. இப்பாசுரமும் அத்தன்மையதேயாம். இத்துணையும் இவர்
  விரும்புவது திருத்துழாயே என்பதற்குக் காட்டிய மேற்கோள்கள்.

5. திருவாய். 6. 8 : 6. இது, ‘இறைவன் கொடுப்பதும் திருத்துழாயே’ என்பதற்கு
  எடுத்துக்காட்டு.